தமிழகத்தில் இன்று (மே 8) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை 9.30 மணியளவில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் , 98.05 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடமும், 97.63 சதவீதத்துடன் கன்னியாகுமரி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.
வருகிற 13-ந்தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனி தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவே ‘லைப்’ கிடையாது
இந்நிலையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இது ‘ரிசல்ட்’ தான், இதுவே ‘லைப்’ கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், 2025-26 கல்வியாண்டில் நாம் மேற்கொண்ட சீரிய பணிகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் சாதனை படைக்கும் என நம்புகின்றோம். மாணவச் செல்வங்கள் தங்கள் முடிவுகளை http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
