கிச்சன் கீர்த்தனா: சிக்கன் டிக்கா பிரியாணி

Published On:

| By Monisha

Chicken Tikka Biryani Recipe in Tamil Kitchen Keerthana

வீக் எண்ட் என்றாலே விருந்து… விருந்து என்றாலே அசைவம் என்றாகிவிட்ட நிலையில், இந்த வார வீக் எண்டை காரசாரமாக, வித்தியாசமாக அமர்க்களப்படுத்த இந்த சிக்கன் டிக்கா பிரியாணி ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

பிரியாணி அரிசி – 250 கிராம்
கோழிக்கறி – 250 கிராம் (விருப்பமான வடிவில் துண்டுகளாக்கவும்)
பெரிய வெங்காயம் – 100 கிராம் (நீளமாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 1
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை – 2 கிராம்
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 1
கிராம்பு – 3
கல்பாசி – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நெய் – 50 மில்லி
எண்ணெய் – 25 மில்லி

மசாலா டிக்கா செய்ய…

மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
தந்தூரி மசாலா பவுடர் – அரை டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
கசூரி மேத்தி – அரை டீஸ்பூன் (காய்ந்த வெந்தய இலைகள்)
திக்கான தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்து கோழிக்கறி, அரை லிட்டர் தண்ணீர், உப்பு சேர்த்து முக்கால் பதத்துக்கு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். பின்பு தண்ணீரை தனியாக ஒரு பவுலில் வடித்து விட்டு, கோழிக்கறித் துண்டுகளை ஆற விடவும். டிக்கா மசாலா செய்யக் கொடுத்த பொருட்களில், எண்ணெய் நீங்கலாக உள்ள மற்ற அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து தண்ணீர் விடாமல் திக்கான பேஸ்ட் பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

ஆறிய சிக்கன் துண்டுகளை இதில் சேர்த்து நன்கு கலக்கி பதினைந்து நிமிடம் ஊற விடவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் விட்டு அதில் கோழிக்கறியைச் சேர்த்து தீயை முற்றிலும் குறைத்து, பச்சை வாசனை போக, இருபுறமும் தலா ஐந்து நிமிடம் வேக விடவும்.

வெந்த கோழிக்கறித் துண்டுகளை முள் கரண்டியால் குத்தியெடுத்து, நேரடியாக தீயில் சில நிமிடம் காண்பித்தால் தந்தூரிக்கே உரிய லேசான கருகிய தோற்றமும், மணமும் கிடைக்கும். அதிக நேரம் நேரடி தீயில் காட்டக் கூடாது.

பிரியாணி செய்ய…

அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றவும். இரண்டும் சூடானவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

இதில் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து வதக்கி, தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து எண்ணெய் பிரிய வேக விடவும். ஊறிய அரிசியைச் இதில் சேர்த்து மெதுவாகக் கிளறவும். அதிகம் கிளறினால் அரிசி உடைந்துவிடும்.

அரிசிக் கலவையில், கோழிக்கறி வெந்த அரை லிட்டர் தண்ணீர், உப்பு (கோழிக்கறியை வேக வைத்த தண்ணீரில் உப்பு இருக்கும் கவனம்) சேர்த்து மூடி போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக விடவும். பிரியாணியில் தண்ணீர் எல்லாம் வற்றியதும், முள்கரண்டியால் அரிசியை லேசாகக் கிளறி விடவும். அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து, பிரியாணியின் நடுவில் சிக்கன் டிக்காவை வைத்து, பிரியாணியால் மூடவும். இனி, மூடி போட்டு தனியாக பத்து நிமிடம் வைத்து, பிறகு பரிமாறினால் பிரியாணிக்கு இடையே சிக்கன் டிக்காவோடு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் முட்டை வறுவல்!

கிச்சன் கீர்த்தனா: மட்டன் மசாலா வடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share