22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த மே 21ஆம் தேதி நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி தான் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில், காவலர் ஆறுமுகப்பாண்டி, “நான் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறேன். என்னால் பயணச்சீட்டு வாங்க முடியாது.
போக்குவரத்து ஊழியர்கள் மட்டும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யலாம். நாங்கள் செய்யக்கூடாதா? அனைவருக்கும் ஒரே விதிமுறைதான்” என்று நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தார்.
பதிலுக்கு நடத்துநர், “டிக்கெட் வாங்கிடுங்க… அதுதான் நல்லது. டிக்கெட் எடுக்காமல் பயணிக்கமுடியாது” என கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ‘அரசுப் பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை.
வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க முடியும்’ என்று போக்குவரத்து துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
நாங்குநேரியில் பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் ஆறுமுகப்பாண்டியன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த விழுப்புரம் போக்குவரத்து கழக பேருந்துக்கு செம்மஞ்சேரி அருகே போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தியதாக ரூ.1000 அபராதம் விதித்தனர்.
சென்னை மாநகர பேருந்து ஒன்றுக்கு தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக ஒரே நாளில் 22 பேருந்துகளுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“போலீசாரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொன்னவுடன், போக்குவரத்து துறைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நோ பார்க்கிங் என்று சொல்லி ஓட்டுநருக்கு ரூ.500ம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ரூ.500ம் என 1000 ரூபாய் அபராதம் விதித்திருக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.
கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிடுவதற்காக 3, 4கிலோ மீட்டர் சுற்ற வேண்டியிருக்கிறது. இதனால் எதிரில் நிறுத்தி இறக்கிவிட்டால், எம்.டி.சி பேருந்துகள் வெளியே வரும்போது பயணிகள் ஏறிக்கொள்கிறார்கள்.
மதுராந்தகத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்துகள் எப்போதும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிர்புறம் தான் ஓரமாக நிறுத்துவார்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் செல்ல விரும்பும் பயணிகள் அங்கு இறங்கிதான் செல்வார்கள். அவர்கள் சாலையைக் கடக்க கூட போலீசார் தான் உதவுவார்கள்.
இந்தநிலையில் போலீஸிடம் டிக்கெட் கேட்டதற்காக போக்குவரத்து துறையை பழிவாங்குகிறார்கள். அந்த டிரைவர் தான் ஃபைன் கட்ட வேண்டும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.
அதேசமயம் காவல்துறை தரப்பில், சட்டம் அனைவருக்கும் சமமானது. யார் நோ பார்க்கிங்கில் நிறுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும் என்கிறார்கள்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணி!
மாணவர்களுக்கு வழங்க 4 கோடி பாடப் புத்தகங்கள் தயார் !
டாப் 10 செய்திகள் : திருவள்ளுவர் திருநாள் முதல் சிறப்பு பேருந்துகள் வரை!