நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடியைத் தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அக்கட்சியினர் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், விஜய் நேற்று (ஏப்ரல் 8) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது விஜயின் வாகனங்களைப் பின்தொடர்ந்த சிலர் விபத்தில் சிக்கினர்.
நெல்லை மாவட்டம் வாகைக்குளம் பகுதியில், விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் முந்திச் செல்ல முயன்றபோது, ஒரு மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதைத் தொடர்ந்து பின்வந்த வாகனங்களும் மோதியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து, விஜய் பிரச்சாரம் நடைபெற்ற பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய் சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனங்களால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 16 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து, விபத்துகள் தொடர்பாகக் கட்சி நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விஜயின் வாகனத்தைப் பின்தொடர்பவர்கள் விபத்துகளில் சிக்கி காயமடைவது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
