விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்கள் இருவர் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நாள்தோறும் சண்டைகளும் மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 10-ல் பெண் போட்டியாளர்கள் இருவர் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்ட காட்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


ஷாதிகா – அக்ஷிதா முத்தம்
பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை ஷாதிகாவும், வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த அக்ஷிதா அசோக்கும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்டதாக அக்டோபர் 23-ந் தேதி நேரலையைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஷாதிகாவின் உதட்டில் இருந்த லிப்ஸ்டிக்கைப் பெறுவதற்காக அக்ஷிதா இவ்வாறு முத்தமிட்டதாகவும் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது ஷாதிகா முதலில் விலகியதாகவும், பின்னர் இருவரும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்டனர்.
இதை அருகே இருந்த பார்த்த சக போட்டியாளரான லட்சுமி பிரியா அதிர்ச்சியில் உறைந்து போய்.. ‘இதை என் கண்ணால பார்க்கனுமா’ என நொந்தும் போகுகிறார்.
இந்த வீடியோதான் இப்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பார்க்கக் கூடிய நிகழ்ச்சியில் ‘ஏதோ’ ஒன்றின் பெயரில் இருவரும் இப்படி நடந்து கொண்டது அநாகரிகத்தின் உச்சம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
யார் இந்த அக்ஷிதா?
பிக்பாஸ் வீட்டில் ஏற்கெனவே போட்டியாளராக இருக்கும் அவினாஷ் அசோக்கின் தங்கைதான் அக்ஷிதா அசோக். சின்னத்திரை நடிகையான இவர், அக்டோபர் 4-ந் தேதி வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
அப்போது தனது அண்ணன் அவினாஷைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அக்ஷிதா, அவரது விளையாட்டு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
யார் இந்த ஷாதிகா?
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ஷாதிகா, குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானவர். சென்னையைச் சேர்ந்த இவர், தனது 2 வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். விஜயகாந்தின் ‘சொக்கத்தங்கம்’, விஜய்யின் ‘குருவி’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘வேழம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
‘மங்கை’, ‘கோலங்கள்’, ‘மை டியர் பூதம்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘மகாநதி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘மகாநதி’ தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
பி.டெக்., எம்.பி.ஏ. படித்துள்ள ஷாதிகா, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 6-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் 10-வது சீசனில் போட்டியாளராக நுழைந்த இவர், அந்த சீசனின் முதல் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் தொடரும் முத்த சர்ச்சைகள்
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் முத்தமிட்டுக் கொள்வது புதிதல்ல. முந்தைய சீசன்களிலும் காதல், நட்பு, விளையாட்டு எனப் பல்வேறு தருணங்களில் போட்டியாளர்கள் முத்தமிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஓவியா – ஆரவ் இடையேயான காதல் விவகாரமும், அதில் இடம்பெற்ற முத்தக் காட்சியும் முதல் சீசனிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
முதல் சீசனில் ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் பெரும் சர்ச்சையானது. ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட ஆரவ், அவரை அமைதிப்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்ததாகக் கூறினார். இதைக் கேட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன், அப்படியொரு ‘மருத்துவ முத்தம்’ குறித்து கேள்விப்பட்டதில்லை என்று கிண்டலடித்தார். அப்போது ‘மருத்துவ முத்தம்’ என்ற வார்த்தையே சமூக வலைதளங்களில் வைரலானது.

2-வது சீசனிலேயே பெண் போட்டியாளர்களின் லிப் டூ லிப் முத்தம்
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது நடிகைகள் ஐஸ்வர்யா தத்தாவும் ஜனனி ஐயரும் டாஸ்க் ஒன்றின்போது உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்டனர். ஜூன் 23-ந் தேதி ஒளிபரப்பான இந்தக் காட்சி சக போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
5-வது சீசனில் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்ததாக வெளியான காட்சியும் பரபரப்பானது. ஆனால், பின்னர் பாவனி அளித்த விளக்கத்தில், அமீர் தமக்கு முத்தம் கொடுக்கவில்லை என்றும் காதில் ‘ஐ லவ் யூ’ என்று கூறியதையே எடிட்டிங் மூலம் வேறுவிதமாகக் காட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 7-வது சீசனில் நிக்சனும் ஐசுவும் கண்ணாடிக் கதவின் இருபுறமும் நின்று முத்தமிடுவதுபோலச் செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தக் காட்சிகளை நீக்காமல் ஒளிபரப்பியதற்கும் விமர்சனங்கள் எழுந்தன.
இப்படி பிக்பாஸ் வீட்டில் முத்த சர்ச்சைகள் தொடரும் நிலையில், தற்போது ஷாதிகா – அக்ஷிதா முத்த விவகாரமும் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, 2-வது சீசனில் ஐஸ்வர்யா தத்தா – ஜனனி ஐயர் முத்தமிட்ட சம்பவத்தை மீண்டும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
