ஆறு மாதங்களுக்கு முன்னர் ‘பென்ஸ்’ படம் குறித்த வீடியோ ஒன்று யூடியூப்பில் வெளியானபிறகு, ’எல்சியுவுல டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்காத ஒரு படம் வரப்போகுது’, ‘ஹரிணி – திப்பு மகன் சாய் அப்யங்கர் இதுல இசையமைப்பாளரா அறிமுகப் போறார்’, ‘இதுல ராகவா லாரன்ஸோட நிறைய ஸ்டார்ஸ் வர்றாங்க’ என்று பல தகவல்கள் உலா வரத் தொடங்கின. benz shooting will be start after long days
‘பென்ஸ்ல நீங்க வில்லனா நடிக்கப் போறீங்களாமே’ என்று மாதவனிடம் ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட, ‘அந்த படம் சம்பந்தமா யாரும் என்கிட்ட பேசவே இல்லையே’ என்று அவர் பதில் சொல்லியிருந்தார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகிற இப்படத்தை அவரோடு பணியாற்றிய ரத்னகுமார் இயக்கப் போவதாக, லோகேஷ் இடம்பெற்ற அறிமுக வீடியோவுக்கு முன்னதாகச் சமூகவலைதளங்களிலும் கூடச் சில செய்திகள் வந்தன. இடையில் என்ன ஆனதோ, ‘ரெமோ’ இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் அந்த இடத்திற்கு வந்தார்.
அதன்பிறகும் பல தகவல்கள். அவை உண்மையா இல்லையா என்று அறிய படக்குழு வாய்ப்பே தரவில்லை.
இந்தச் சூழலில்தான், தற்போது ‘பென்ஸ்’ படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிப்பு வந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் அதனைச் சொல்லியிருக்கிறது.
எளிய முறையில் நடைபெற்ற பூஜையை அடுத்து, ஹோட்டலில் பணியாற்றுபவர் போன்ற உடையமைப்போடு ராகவா லாரன்ஸ் தோன்றுகிற ஷாட்களும் படமாக்கப்பட்டிருக்கின்றன. லோகேஷ் தான் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்திருக்கிறார். பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு குழுவினரை வாழ்த்தியிருக்கிறார். இதில் மலையாள நடிகர் நிவின் பாலி இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
இது போக சூர்யா, பகத் பாசில், நயன்தாரா எனப் பலரும் உண்டு என்று ரசிகர்கள் தகவல்களை வாரியிறைத்து வருகின்றனர்.
‘மஹாராஜா’ தந்த பேஷன் ஸ்டூடியோஸ் இதனைத் தயாரிக்கிறது. விஜய்யின் மேலாளர் ஜகதீஷ் பழனிசாமியும் இதில் ஒரு தயாரிப்பாளராகக் கைகோர்த்திருக்கிறார்.
போதைப்பொருள், அந்த மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கிற குடோன், அடியாட்கள், நவீன ஆயுதங்களுடன் திரிகிற இளையோர் கூட்டம், அனைவரையும் வேட்டையாடுகிற நடுத்தர வயது நாயகன் என்று ‘டிபிகல்’ லோகேஷ் கனகராஜ் படமாக ‘பென்ஸ்’ அமையப் போவது இப்போதே மனக்கண்களில் தெரிகிறது.
‘கூலி’ முடித்த கையோடு எப்போது ‘எல்சியு’வை கையிலெடுப்போம் என்று துடிக்கிற லோகேஷுக்கு இப்படத்தின் பூஜை நிறையவே ஆறுதலளித்திருக்கும். அதனால், ‘ஒருவழியா படப்பிடிப்பு ஆரம்பிச்சாச்சு’ என்று அவர் அகம் மகிழ்ந்திருப்பார். ரசிகர்களுக்கும் அதே எண்ணம் தான். ‘வித்தியாசமான ரூட்ல ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மாதிரி ராகவா லாரன்ஸை பார்க்க விரும்புபவர்களை ஓரளவுக்கு ஈர்த்தாலே போதும்’ என்பதுதான் ‘பென்ஸ்’ குறித்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.
இப்படத்தில் இணைகிற நட்சத்திரக் கூட்டம் குறித்த அறிவிப்புகள் இனி தொடர்ந்து வெளியாகும்; ‘பென்ஸ் அப்டேட் என்ன’ என்று கேட்கிற நிலைமை வரக்கூடும். அதற்குள் இப்படம் நிறைவுற்று வெளியிடத் தயாரானால் எப்படியிருக்கும்? இப்போதைய சூழலில், இதுவே சிறப்பான, தரமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்..!