வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்ததிலிருந்து அதிக வெயிலில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நார்மலாக உள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் களம் காண்கிறார். இந்நிலையில், நேற்று காலில் வீக்கம் ஏற்பட்டு அவர் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த இரண்டு நாட்கள் அவர் சிகிச்சையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியானது.
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 11) கோவை வடக்கு தொகுதியில் வானதிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “வானதி அக்கா மிகவும் அற்புதமாக உள்ளார். நேற்று இரவு நாங்கள் எல்லோரும் சென்று அவரைச் சந்தித்து வந்தோம். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்ததிலிருந்து அதிக வெயிலில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நார்மலாக உள்ளார். இன்று, நாளை என இரண்டு நாட்கள் தான்.. நாங்கள் எல்லோரும் பிரச்சாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றும் பயப்படுவதற்கு இல்லை.
கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் அக்கா அடுத்த ஐந்து ஆண்டுகள் சேவை செய்வதற்கு நேற்றும், இன்றும், நாளையும் மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் களத்திற்கு, இன்னும் வேகமாக, வீரியமாக வேலை செய்வார்.” என்று தெரிவித்தார்.
