தமிழ்நாட்டில் ராகுல் காந்தியின் பரப்புரை இருக்குமா என்பதே சந்தேகம்தான் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். ‘ஸ்டாலின்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. ‘காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்’, ‘கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று மட்டுமே தெரிவித்தார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரே நாளில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் ராகுல் காந்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அதனால், தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. ராகுல் காந்தி கோவை விமான நிலையம் வந்து, இங்கிருந்து மாற்று விமானம் மூலம் செல்கிறார். ஆனால் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கூட அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அதனால், ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, ஒரு அழையா விருந்தாளியாக, ஏதோ ஒப்புக்கு சப்பாணியாக ‘ஒரு கட்சி இருக்கிறது, நாம் வரவேண்டும்’ என்பது போல அவருடைய மனநிலை உள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை வந்து சென்றார் என்பதை எண்ணிப் பாருங்கள். இதிலிருந்து, இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று தெரிகிறது. ராகுல் காந்தி இங்கு திமுக ஜெயிக்க வேண்டாம் என்று நினைக்கிறார் என நான் பார்க்கிறேன்.
புதுச்சேரியில் ராகுல் காந்தியின் நடவடிக்கையைப் பார்க்கும் போது, தமிழகத்தில் காங்கிரஸின் நடவடிக்கையைப் பார்க்கும் போது, திமுக தலைமையிலான கூட்டணி ஜெயிப்பதை ராகுல் காந்தி விரும்புகிறாரா என்ற கேள்வி எழுகிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
