தனது அடுத்த கார் பந்தயத்திற்கு தயாராவதற்காக நடிகர் அஜித் குமார் பெல்ஜியம் சென்றடைந்துள்ளார். ajithkumar moved to belgium for gt4
கடந்த ஆண்டு நடிகரும் தொழில்முறை பந்தய வீரருமான அஜித், தனது வாழ்நாள் ஆசையாக இருந்த ’அஜித் குமார் ரேசிங்’ என்ற பெயரில் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
அதில் அணியின் உரிமையாளரான அஜித், மேத்தியூ டெட்ரி, ஃபேபியன் டஃபியக்ஸ் மற்றும் கேமரூன் மெக்லியோட் ஆகியோருடன் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.
நிறுவனம் ஆரம்பித்த இரண்டே மாதத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 24H துபாய் 2025ல் 991 பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேலும் இத்தாலியில் நடந்த 12H முகெல்லோவில் மீண்டும் அதே சாதனையை செய்தது அஜித் குமார் ரேஸிங் டீம்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான GT4 ஐரோப்பிய தொடர் கார் பந்தயத்தில் பங்கேற்க முழு வீச்சில் தயாராகி வருகிறார் அஜித்.
GT4 தொடர் என்பது GT4-ஸ்பெக் கார்களைக் கொண்ட ஒரு முக்கிய ஸ்போர்ட்ஸ் கார் சாம்பியன்ஷிப் ஆகும்.
இதில் தனது அணியின் வெற்றியைத் தொடர்வதற்காக போட்டி நடைபெறும் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா- ஃபிராங்கோர்சாம்ப்ஸில் பயிற்சி பெறுவதற்காக பெல்ஜியம் சென்றடைந்துள்ளார் அஜித்.
இதுதொடர்பான வீடியோவை அஜித் குமார் ரேசிங், அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அஜித் மேற்கொள்ள இருக்கும் பயணத் திட்டமும் வெளியாகியுள்ளது.
GT4 தொடரில் மே 16 முதல் 18 வரை ஜான்ட்வோர்ட் சர்க்யூட்டில் நடைபெறும் போட்டிக்காக நெதர்லாந்து செல்ல உள்ளார் அஜித்.
அதன்பின்னர் ஜூன் 26 முதல் 29 வரை பெல்ஜியம், ஜூலை 18 முதல் 20 வரை நடைபெறும் பந்தயத்திற்காக இத்தாலியின் மிசானோவுக்குச் செல்வார். இறுதியாக பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற நூர்பர்க்ரிங்கில் டிராக்கில் அக்டோபர் 10 முதல் 12 வரை நடைபெறும் போட்டிக்காக ஸ்பெயினுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் குவித்து வருகிறது. இந்த நிலையில், தனது கனவை பின் தொடர்ந்து கார் ரேஸில் பயணித்து வரும் அஜித்தின் ஆர்வம் அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
