அஜித் கேட்ட 100 கோடி: ஒப்புக்கொண்ட நிறுவனம்!

Published On:

| By admin

அஜித்தின் 62 ஆவது படத்துக்கு அவரது தரப்பில் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்க அதற்கு சத்யஜோதி நிறுவனம் முடியாது என மறுத்துவிட்டது. ஆனால், எதையும் தாங்கும் இதயமாகத் தமிழ் சினிமாவில் இருக்கும் லைகா நிறுவனம் அஜித்குமாரின் 100 கோடி ரூபாய் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது.

அஜித்குமார் நடிக்கும் 61 ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பே தொடங்காத நிலையில், அஜித்குமார் நடிக்கும் 62 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 18, 2022 அன்று வெளியானது.

ADVERTISEMENT

அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார். முன்னதாக, அஜித்தின் 62 ஆவது படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. விவேகம் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க கால்ஷீட் கொடுப்பதாக அஜித்குமார் கூறியிருந்தார். அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன.

திடீரென லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு எப்படி என்கிற கேள்வியுடன் கோடம்பாக்கத்தை வலம் வந்தபோது அதற்கான விடையாகக் கிடைத்த தகவல்….

ADVERTISEMENT

அடுத்த படத்துக்கான சம்பளம் நூறுகோடி என்று அஜித்குமார் சொல்லியிருக்கிறார். அதற்கு சத்யஜோதி நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை

ஏற்கெனவே அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்கள் பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளன. அப்படங்களில் அஜித்குமார் சம்பளம் 55கோடி ரூபாய். அதிலேயே நஷ்டம், இந்த நிலையில் நூறு கோடி சம்பளம் கொடுத்தால் படம் தொடங்குகிறபோதே நஷ்ட கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதற்கு படம் தயாரிக்காமலிருந்து விடலாம் கௌரவத்திற்கு கவரிங் நகை போடவேண்டிய அவசியமில்லை. எனவே எங்களால் 100 கோடி சம்பளம் கொடுத்து நஷ்டப்பட முடியாது என என்று கூறிவிட்டது சத்யஜோதி நிறுவனம்.

அதேசமயம் லைகா நிறுவனம் நூறுகோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டதாம். அதனால் அந்நிறுவனத்துக்குப் படம் நடிக்கிறேன் என்று அஜித்குமார் சொல்லியிருக்கிறார்.உடனே அவரை வணங்கி வழியனுப்பிவைத்துவிட்டதாம் சத்யஜோதி நிறுவனம்.

அதன்பின்னரே லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share