”தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது; அதிமுகவின் தலைமையிலான இந்த கூட்டணியை ஏற்கும் கட்சிகளை சேர்ப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது” என அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று டிசம்பர் 10-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய அளவில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக, தமிழகத்தில் அதிமுகவின் தலைமையை ஏற்றுள்ளது.
இந்தக் கூட்டணியின் ஒரே நோக்கம், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதுதான். இந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் தொடருகின்றன.
ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் நலன் கருதி, அரசியல் பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடையவர்கள்- திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற மனநிலையில் உள்ள மேலும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணைகிற வாய்ப்புள்ளது.
அப்படி கூட்டணியில் இடம் பெறுகிற கட்சிகள், கூட்டணியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்களாகவும் கூட்டணியின் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களாகவும் கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்ற முழு மனதோடும் ஒத்துழைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்கிற முழு அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது.
