திராவிடம் இல்லாத தமிழகம் என ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் முழக்கமிடுவதால், ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொன்றுவிடுவது என்பதுதான் அர்த்தமா? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என துணை முதல்வர் உதயநிதி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி ஸ்ரீமதி, ”உதயநிதியின் பேச்சு வெறுப்பு பேச்சு; ஒழிப்போம் என்பதே இனப்படுகொலையைத்தான் குறிக்கும்.. மதத்தை வேரறுப்போம் என்பதும் மதப்படுகொலைதான்.. திக, திமுக 80% இந்துக்களுக்கு எதிரான கட்சிகள்” என்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் கருத்துகளை கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் இன்று ஜனவரி 22-ந் தேதி கூறியதாவது: பாஜகவின் எச்.ராஜா பேசுவதற்கும் நீதிபதி ஸ்ரீமதி பேசுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதற்கும் ஸ்ரீமதி பேசுவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
பாஜகவின் எச்.ராஜா என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் நீதிபதி ஸ்ரீமதி அப்படி பேச முடியுமா? நீதிபதி ஸ்ரீமதி, அரசியல் சாசனத்தின் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்.
இந்த நாட்டில் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலரும் வெறுப்பு பேச்சை பேசியுள்ளனர். கலைஞர், உதயநிதியின் தலைக்கு விலை வைக்கவில்லையா? அப்படி பேசியது எல்லாம் நீதிபதி ஸ்ரீமதிக்கு தெரியாதா?
திராவிடம் இல்லா தமிழகம் என பாஜக பிரசாரம் செய்தது. அப்படியானால் திராவிட மக்கள்- திராவிடர்களை- ஒட்டுமொத்த தமிழர்களையும் கொன்று விட வேண்டும் என்று அர்த்தமா? அப்படித்தான் எச்.ராஜா, ஆர்.எஸ்.எஸ். பாஜக சொல்கிறதா? இப்படி சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? நீதிபதி ஸ்ரீமதி குற்றவியல் சட்ட வரம்புகளை மீறி உள்ளார். இவ்வாறு வாஞ்சிநாதன் கூறினார்.
