“உயிர் உள்ளவரை அதிமுகதான்.. ஆனால்..” நடிகர் ராமராஜன் ஓபன் டாக்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தாலும் நான் என்றென்றும் அதிமுககாரன்தான் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த நட்சத்திரப் பேச்சாளரும் நடிகருமான ராமராஜன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து ராமராஜன் பிரச்சாரம் செய்தார்.

ADVERTISEMENT

அதிமுக மேடைகளில் தோன்றும் ராமராஜன், தவெக வேட்பாளருக்கு வாக்கு கேட்டபோதும், “நான் அதிமுகவைச் சேர்ந்தவன் தான்” என்று தெளிவுபடுத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமராஜன் கூறியதாவது:“ஆலங்குளம் தொகுதியில் எனக்கு 35 ஆண்டுகளாக உறவினராக இருக்கும் அன்பிற்குரிய கனகராஜ் மற்றும் வைகுண்டராஜ் அவர்களின் புதல்வன் இங்கு வேட்பாளராக நிற்கிறார். சாமானியன் படம் தியேட்டரில் ஓடும்போது நான் இங்கு வந்தபோது, ‘நான் சுயேச்சையாக நிற்பேன்’ என்று சொன்னார். நான் கண்டிப்பாக பிரச்சாரத்துக்கு வருவேன் என்று சொல்லியிருந்தேன்.அப்போது என் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இவர் சுயேச்சையாக இல்லாமல் தவெகவில் இணைந்து வேட்பாளராக வந்தார்.

ADVERTISEMENT

எனது 35 ஆண்டு கால உறவினருக்காக நான் இங்கு வாக்கு கேட்கிறேன். இது கட்சி, மதத்துக்கு அப்பாற்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டது. எந்தவித உள்நோக்கமும் இல்லை.என் உயிர் உள்ளவரை என் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்களை யாராலும் என்னிடமிருந்து அகற்ற முடியாது.

என்றைக்கும் நான் அதிமுகவைச் சேர்ந்தவன் தான். எம்ஜிஆர், அம்மா தான் என் தெய்வம்.சாமானியன் படம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. நான் எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று யாரும் கேட்கவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக என்னுடன் இருந்து எனது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்த அன்புத்தம்பி கனகராஜுக்கு நன்றி உணர்வின் அடிப்படையில் இதைச் செய்கிறேன்.இது அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜாதி-மதங்களுக்கு அப்பாற்பட்டு, நட்பின் காரணமாகவும் உறவின் காரணமாகவும் நான் வாக்கு சேகரிக்கிறேன். அதிமுக இயக்கத்தில் தான் இருக்கிறேன். இன்றும் நான் தலைவருக்கும் அம்மாவிற்கும் தொண்டன் தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

ADVERTISEMENT

எத்தனை கோடி கொடுத்தாலும் எனது கொள்கையில், சினிமாவில் உறுதியாக இருப்பது போல் அரசியலிலும் உறுதியாக இருக்கிறேன். இந்த காலகட்டத்தில் நான் செய்யும் நன்றிக்கடன் இது. எனக்கு உதவியவர்களுக்கு நான் செய்யும் கைமாறு.மேலூரில் எனது முதலாளியின் மகன் இப்போது சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரும் என்னை பிரச்சாரத்துக்கு அழைத்துள்ளார். அதனால் அங்கும் நான் போய் ஆக வேண்டும். இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் நான் இவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறேன்.” என தெளிவுபடுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share