தொடர்ந்து வரும் மாலிவுட் ஹிட் அலையில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று தான் ‘ ஆவேசம் ‘. இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன், கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ ரோமான்சம் ‘ திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.
அந்தப் படத்தில் குழுவாய் வாழும் ஆண் இளைஞர்களின் வாழ்வியல், அதற்குள் அவர்களை ஆட்டிப் படைக்கும் ஓஜா போர்டு என, ஒரு நல்ல ஹாரர் காமெடி திரைப்படத்தினை நமக்கு விருந்தாக படைத்திருந்தார்.
அதேபோல், இந்தப் படத்திலும் மேன்சனில் வசிக்கும் மூன்று பொறியியல் கல்லூரி இளைஞர்களை, மையக் கதாபாத்திரமாக வைத்து படமாக்கியுள்ளார் இயக்குனர். ஆனால், இம்முறை வாழ்வியல் மட்டும் கொஞ்சம் மிஸ்ஸிங்.
கல்லூரி மாணவர்கள்
பெங்களூரில் பொறியியல் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், தங்கள் கல்லூரியின் சீனியர்களின் ராகிங் தொல்லையில் இருந்து தப்பிக்க, ஒரு லோக்கல் ரவுடியின் உதவியைத் தேடுகின்றனர். தேடல் முடிவில் அந்த லோக்கல் ரவுடியைக் (பஹத் ஃபாசில்) கண்டறிகின்றனர்.
பகத் ஃபாசில் இவர்களது வாழ்க்கைக்குள் வந்தபின்னர் என்ன நடக்கிறது?, இவர்கள் பிரச்சனை தீர்ந்ததா?, நிஜத்தில் பஹத் பாசில் யார்? போன்றவற்றை சொல்வது தான் ‘ஆவேசம் ‘ திரைப்படத்தின் கதையாகும்.
‘ரோமியோ’ விஜய் ஆண்டனி கவர்கிறாரா? – திரை விமர்சனம்!
ஒரு பெரிய ரவுடியிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள் என்கிற லைன் ஒரு வகையில் ‘ஜிகர்தண்டா ‘ திரைப்படத்தை ஞாபகப்படுத்தினாலும், திரைக்கதை வடிவில் நம்மை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார் ஜீத்து மாதவன்.
பஹத் ஃபாசில்
குறிப்பாக பஹத் ஃபாசிலின் கதாபாத்திர வடிவமைப்பு, அவர் செய்யும் அலப்பறை, படமெங்கும் உள்ள ஒரு வகையான டார்க் ஹியூமர் , பஹத் ஃபாசிலின் அசிஸ்டண்ட்டாக வரும் ஒரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பு, இடைவேளைக் காட்சியில் வரும் ஃபைட் என நிமிடத்திற்கு நிமிடம் நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார் இயக்குனர்.
இது போன்ற கதாபாத்திரங்களை பகத் ஃபாசில் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வது வழக்கம். ஒரு கச்சிதமான காமிக்கல் அம்சங்கள் கொண்ட வில்லனாகக் கலக்கியிருக்கிறார் பஹத்.
பல மொழிகளில் எதிரிகளை எச்சரிப்பது, அம்மா செண்டிமெண்ட்டில் பொங்குவது, சிறிய விஷயங்களுக்கு டென்ஷன் ஆவது என, நகைச்சுவை கலந்த நடிப்பில் நம்மைக் கவர்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் நடிப்பு படத்தின் டிரேட் மார்க் ஆக அமைந்துள்ளது.
லாஜிக் மிஸ்ஸிங்
அவரைத் தவிர்த்து, கல்லூரி மாணவர்களாக நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும், ‘சாந்தன் ‘ என்கிற கதாபாத்திரம் தனது பாவனையால் செய்யும் நகைச்சுவை, ஆங்காங்கே வரும் கவுண்டர் காமெடி என, அனைத்தும் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகிறது.
மறுபக்கம் எந்த பொறியியல் கல்லூரியில் இப்படி ஒரு சுதந்திரம் இருக்கும்?, ஏன் காலேஜ் முதல் மேன்சன் வரை அனைவரும் புகையும், பாட்டிலுமாய் மட்டுமே உள்ளனர்? போன்ற லாஜிக் கேள்விகளும் எழத்தான் செய்தன.
இது போன்ற சில விஷயங்களால் படத்தின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து ஒரே மாதிரியான காட்சிகளைப் பார்ப்பது போன்ற, ஒரு எண்ணம் தோன்றியது. அதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
சண்டைக் காட்சிகள்
சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு அந்தப் படம் நடக்கும் உலகிற்குள் நம்மைக் கொண்டு செல்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் வரும் ஷாட்ஸ் அந்தக் காட்சியை மேலும் ஒரு மடங்கு மக்களிடையே எடுத்துச் செல்கிறது. சுஷின் ஷியாமின் இசை படத்திற்கு பேருதவி என்றே சொல்ல வேண்டும்.
குறிப்பாக பஹத் ஃபாசிலின் மாஸ் காட்சிகளில் அவரது பின்னணி இசை ஒட்டுமொத்த காட்சியையுமே தூக்கி நிறுத்துகிறது. கடந்த ஆண்டு வெளியான ‘தள்ளுமலா’ திரைப்படத்திற்குப் பிறகு ரசிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் உள்ள ஒரு மலையாளப் படமாக இந்த ‘ஆவேசம்’ திரைப்படம் உள்ளது.
சண்டை இயக்குநர் சேத்தன் டி சோசா நகைச்சுவை கலந்த நேர்த்தியான கமர்சியல் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கிளைமாக்ஸ் மற்றும் இடைவேளைக் காட்சி ஃபைட் ஆகியவை ‘ஆவேசத்தின்’ உச்சம் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் இந்த ‘ஆவேசம்’ நண்பர்கள் கூட்டத்துடன் தியேட்டரில் கண்டு ரசிக்க வேண்டிய ஒரு ஆக்ஷன் காமெடி திரைப்படமாகும். இரண்டாம் பாதியில் வரும் ஒரு சில காட்சிகளை மட்டும் பொறுத்துக் கொண்டால் நிச்சயம் படத்தை முழுமையாக ரசிக்கலாம்.
(குறிப்பு : இது முழுக்க தியேட்டரில் பார்ப்பதற்கான படமே. ஓடிடியில் வெளியாகும் போது நிச்சயம் இதை விமர்சிக்கும் ஆன்லைன் வாசிகள் வரலாம்.)
–ஷா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம்: அண்ணாமலை மீது வழக்கு!
RCB Vs MI: ஆர்சிபி தோற்க ‘அம்பயர்’ தான் காரணம்… ‘ஆதாரம்’ பகிரும் ரசிகர்கள்!
பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: இரண்டு பேர் கைது!
பாஜக – திமுக மோதல்… “அண்ணாமலையின் மிரட்டல் கோவையில் எடுபடாது”: கணபதி ராஜ்குமார்