பாஜக – திமுக மோதல்… “அண்ணாமலையின் மிரட்டல் கோவையில் எடுபடாது”: கணபதி ராஜ்குமார்

அரசியல்

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 11) பிரச்சாரம் செய்வதற்காக இரவு 10.40 மணிக்கு வந்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக அப்பகுதியைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.

இதனையடுத்து அண்ணாமலை அங்கிருந்து தனது காரில் கிளம்பினார். தொடர்ந்து பாஜக மற்றும் திமுக, மதிமுக, சிபிஎம் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது  294 பி, 323, 147 ஆகிய பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவையில் இன்று (ஏப்ரல் 12) செய்தியாளர்களிடம் பேசிய  திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “கோவை அமைதியை விரும்பும் ஒரு நகரம். இங்கே ரவுடிசம் எடுபடாது. இதுபோன்ற நிலையில், பாஜக இப்போது தங்களது சுயரூபத்தை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

தோல்வி பயத்தால் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் கலவரத்தை உண்டாக்கலாம் என்ற ஐயம் எங்களுக்கு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை வைத்தே பிரச்சாரம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதனை கவனிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை ஒரு இடத்தில் இரவு 11 மணிக்கு பிரச்சாரம் செய்துள்ளார். இதுகுறித்து திமுக வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் புகாரளித்தும் அதனை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தோல்வி பயத்தால் பாஜக இடையூறு செய்வதற்காக வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா என்ற ஐயம் எங்களுக்கு எழுகிறது. அதற்கு முதல் உதாரணம் தான் நேற்று நடந்த சம்பவம்.

அதனால் தேர்தல் ஆணையம், காவல்துறை இரண்டுமே நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அவர்களது மிரட்டல்கள் எல்லாம் கோவையில் எடுபடாது” என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹை ஸ்பீடில் தங்கம் விலை: சவரன் 54 ஆயிரத்தை கடந்தது!

சிதம்பரத்தில் திருமா… வித்தியாசக் காட்சிகள்: கள நிலவரம் சொல்லும் காந்தி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *