புதிதாகத் திருமணமானவர்கள், காதலில் விழுந்தவர்கள், நட்பில் காதலை விதைக்க எண்ணுபவர்கள் ஜோடியாகச் சேர்ந்து பார்ப்பதற்கென்றே சில திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். சமீபகாலமாக அப்படிப்பட்ட படங்களின் வருகை அருகி வருகின்றன.
அப்படியொரு சூழலில், புரிதல் இல்லாத ஜோடிகளிடத்தில் காதல் முளைப்பதைக் காட்டும் படமாக ’ரோமியோ’ இருக்கும் என்ற உத்தரவாதத்தைத் தந்தது அதன் ட்ரெய்லர். விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தினைப் புதுமுகமான வினாயக் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். பரத் தனசேகர் இசையமைத்திருக்கிறார்.
ஆக்ஷன் படங்களில் மட்டுமே விஜய் ஆண்டனி ஜொலிப்பார் என்ற விமர்சனம் பரவலாக உள்ள நிலையில், இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தை ரசிகர்களுக்குத் தருகிறது?
பார்த்த நொடியே காதல்
வீட்டுக்கடனை அடைப்பதற்காகச் சிறு வயதில் மலேசியாவுக்கு வேலை செய்யச் சென்றவர் அரவிந்த் (விஜய் ஆண்டனி). கடன்களை அடைத்து, கையில் கொஞ்சம் பணத்தையும் சம்பாதித்துக் கொண்டு அவர் சொந்த ஊரான தென்காசிக்குத் திரும்புகிறார். அப்போது, அவருக்கு 35 வயதாகிறது.
’இப்போதாவது திருமணம் செய்துகொள்’ என்று அவரது பெற்றோர் (இளவரசு – சுதா) கூறுகின்றனர். அவர்களிடம், ‘நான் காதலித்து திருமணம் செய்து கொள்வேன்’ என்கிறார் அரவிந்த். அதற்கு ஏற்றாற்போல, உறவினர் (தலைவாசல் விஜய்) மகளான லீலாவைச் (மிருணாளினி ரவி) சந்திக்கிறார்.
பார்த்த முதல் நொடியிலேயே காதலில் விழுகிறார். அதனை அவரது பெற்றோரும் காண்கின்றனர். அதற்கடுத்த சில நாட்களில், லீலாவின் குடும்பத்தினரோடு திருமணப் பேச்சில் ஈடுபடுகின்றனர்.
லீலாவுக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. காரணம், சென்னையில் ஐடி நிறுவனமொன்றில் வேலை பார்ப்பதாகப் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு சினிமாவில் நாயகி ஆகும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
கையில் கிடைத்த நாயகி வாய்ப்புகள் நழுவிப்போனதால், அவர் கடுமையான மனவிரக்தியில் இருக்கிறார். அதனால், அரவிந்தைக் கண்டதுமே அவருக்குள் எரிச்சல் பெருகுகிறது. ஆனாலும், தனது நாயகி ஆகும் கனவுக்குத் தடையாக விளங்கும் தந்தையைச் சமாளிக்க வேறு வழி தெரியாமல் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.
திருமணத்திற்குப் பின் அரவிந்த் – லீலா ஜோடி சென்னைக்கு இடம்பெயர்கிறது. லீலாவுக்குத் தன் மீது ஈர்ப்பில்லை என்பதைத் தாலி கட்டும் கணத்திலேயே உணர்கிறார் அரவிந்த். ஆனாலும், தனது விருப்பம் ஒருதலைக்காதலாகத் தொடரட்டும் என்று நினைக்கிறார். லீலாவுக்குப் பிடித்தமான விஷயங்களை பார்த்துப் பார்த்து செய்கிறார்.
லீலாவின் மனத்தளர்ச்சியைப் போக்க, விக்ரம் என்ற பெயரில் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு உரையாடத் தொடங்குகிறார் அரவிந்த். அவரது விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்.
ஒருநாள் நாயகி வாய்ப்பு கேட்டுச் சென்ற லீலாவிடம் தவறாகப் பேசுகிறார் ஒரு தயாரிப்பாளர். அதனைக் கேள்விப்பட்டதும், அவரைப் புரட்டியெடுக்கிறார் அரவிந்த். அப்போதும் கூட, விக்ரம் என்ற பெயரிலேயே அந்த விஷயத்தைக் கேட்டறிகிறார்.
ஒருகட்டத்தில், தனது மனைவிக்கு விக்ரம் என்ற முகம் தெரியாத நபர் மீது காதல் வந்துவிட்டதோ என்று சந்தேகப்படத் தொடங்குகிறார் அரவிந்த். அவரை விட்டு விலகவும் தயாராகிறார்.
அதேநேரத்தில், லீலாவை நாயகியாகக் கொண்டு ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.
அதில் அரவிந்தே நாயகனாகவும் நடிக்கிறார். அதனை இயக்குபவர், ஒளிப்பதிவாளர், ஸ்டைலிஸ்ட் மூவரும் தனது நண்பர்கள் என்பதால் அதற்குச் சம்மதிக்கிறார் லீலா. படமும் கொஞ்சம், கொஞ்சமாக வளர ஆரம்பிக்கிறது. அதன்பிறகாவது அரவிந்தின் உண்மையான காதலை லீலா புரிந்து கொண்டாரா? என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
காதலை மையப்படுத்திய கதை
இந்தியா பாகிஸ்தான் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம் இது. தனது தோற்றம் மற்றும் நடிப்பு பாணிக்கு ஏற்ற கதையைத் தேர்வு செய்த நடித்த வகையில் அவரது முடிவு நிச்சயம் பாராட்டுக்குரியது. இப்படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
கொஞ்சம் அழகான, சினிமாவில் நடிக்கும் ஆசை கொண்ட பெண்ணாகத் திரையில் வெளிப்பட்டிருக்கிறார் மிருணாளினி ரவி. பின்பாதிக் காட்சிகளில் அவரது நடிப்பு அருமை.
முழுக்கக் காதலை மையப்படுத்திய கதை என்றபோதும் விஜய் ஆண்டனி, மிருணாளினி பாத்திரங்களின் வேறுபட்ட குணாதிசயங்கள் மூலம் ‘லவ் கெமிஸ்ட்ரி’ தொடர்பான கேள்விகளைத் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்.
இளவரசு, சுதா சம்பந்தப்பட்ட தொடக்கக் காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. ஆனால், அவர்களது காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். விடிவி கணேஷும் அதே அளவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறார்.
இதில் மிருணாளினியின் பெற்றோராக தலைவாசல் விஜய் – ஸ்ரீஜா ரவி வந்து போயிருக்கின்றனர். ‘லவ் பார்’ நடத்துபவராக வரும் யோகிபாபு, விஜய் ஆண்டனிக்கு காதல் அறிவுரைகளைச் சொல்கிறார். ஆனால், அவரது பாத்திரம் தனித்துத் துருத்தலாகத் தெரிகிறது.
மிருணாளினியின் நண்பர்களாக வரும் ஆர்ஜே ஷரா மற்றும் இளம் இயக்குனர், ஸ்டைலிஸ்ட் ஆக வரும் பெண் ஆகியோர் ஆங்காங்கே சிரிப்பு மூட்டியிருக்கின்றனர். சிக்னல் காட்சி படப்பிடிப்பு, நாயகன், நாயகி திருமணம், சண்டைக்காட்சி உட்பட மிகச்சில காட்சிகளில் மட்டுமே ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் அதிகம் தென்படுகின்றனர்.
பெரும்பாலான காட்சிகள் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், திரையில் கலர்புல் அனுபவத்தைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரூக் ஜே பாஷா. கமலநாதனின் கலை வடிவமைப்பில் நாயகன் வீடு கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ள விஜய் ஆண்டனி, கனகச்சிதமாகத் திரையில் கதை விரிய உதவியிருக்கிறார். அதேநேரத்தில் பிளாஷ்பேக் காட்சியில் தென்படும் தெளிவின்மை திரைக்கதையின் ஆன்மாவைச் சேதப்படுத்தியிருக்கிறது. போலவே, செல்லக்கிளி பாடல் இடம்பெற்றிருக்கும் இடம் நிச்சயம் நம்மை அயர்வுக்கு உள்ளாக்கும்.
பரத் தனசேகரின் இசையமைப்பில் ‘வெத்தலை வெத்தலை’ பாடல் துள்ளலைத் தருகிறது. திரைக்கதையின் நடுப்பகுதியில் வரும் காட்சிகளில் நகைச்சுவை உணர்வை நிறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது அவரது பின்னணி இசை. அதுவே, இந்த ஆண்டு தமிழ் திரையுலகத்திற்குக் கிடைத்த நல்வரவாக அவரைக் கொண்டாடச் செய்கிறது.
திரைக்கதையில் கூட்டுழைப்பு அவசியம் என்பதை உணர்ந்து செயலாற்றியிருக்கிறார் இயக்குனர் வினாயக் வைத்தியநாதன். எடுத்துக்கொண்ட கருவுக்குத் தக்கவாறு திரைக்கதை அமைத்த உத்தி ஈர்ப்பைத் தருகிறது.
அதேநேரத்தில் நாயகனின் பிளாஷ்பேக்கை வடிவமைத்த விதமும், நாயகியை மது அருந்துபவராகக் காட்டியதும் திரைக்கதையில் துருத்தலாகத் தெரிகின்றன. அவற்றை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.
கொஞ்சம் வித்தியாசமான படம்
ஷாரூக் கான் நடித்த ‘ரப் நே பனா தி ஜோடி’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ உட்படச் சில படங்களை நினைவூட்டுகிறது ‘ரோமியோ’. அப்படங்களில் இருந்தது போலவே இதில் நாயகனின் தோற்றம் உள்ளதும் அதற்கொரு காரணம்.
என்னதான் கணவன் மீது வெறுப்பைக் கொட்டினாலும், அவர் தனக்குச் செய்யும் நல்லவை குறித்து நாயகி சிந்திப்பதாகவோ, எதிர்வினை ஆற்றுவதாகவோ இதில் காட்சிகள் இல்லை. மாறாக, வெறுமனே வசனங்களில் மட்டுமே அவை சொல்லப்படுகின்றன. அதனைச் சரிப்படுத்தியிருக்கலாம்.
மனைவிக்குத் தெரியாமல் ஒரு பொய்யான பெயரில் நாயகன் உரையாடுவதெல்லாம் சரி; ஆனால், நாயகனின் இயல்பான குணத்திற்கும் அந்தக் குரலில் வெளிப்படும் குணாதிசயத்திற்குமான வித்தியாசம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. அதனை ஏன் கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.
யோகிபாபு, விஜய் ஆண்டனி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது, கிடைத்த கால்ஷீட்டை வைத்து அவற்றைப் படம்பிடித்தார்களோ என்ற எண்ணம் எழுகிறது. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் வரும் சந்தானம் போன்று தெரிந்துவிடக் கூடாது என்று மெனக்கெட்டவர்கள், அந்த பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் ‘பாலிஷ்’ செய்திருக்கலாம்.
ஷரா, விடிவி கணேஷ், இளவரசு வரும் காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அதே அளவுக்குப் பின்பாதியில் விஜய் ஆண்டனி நம்மைச் சிரிக்க வைத்திருக்க வேண்டும். அது முழுமையாக நிகழவில்லை.
போலவே படப்பிடிப்புத்தளத்தில் சண்டைக்காட்சி, நாயகன் நாயகி இடையிலான ரெஸ்டாரண்ட் சந்திப்பு போன்றவை ‘எப்படா கிளைமேக்ஸ் வரும்’ என்று நம்மை அயர்ச்சியுறச் செய்கின்றன.
அதேநேரத்தில், நீதிமன்றத்தில் நிகழ்வதாக வரும் கிளைமேக்ஸ் காட்சி நம்மைத் திருப்தியுடன் தியேட்டரை விட்டு வெளியேறச் செய்கிறது. அதே திருப்தியை ஒவ்வொரு காட்சியிலும் பெறச் செய்திருந்தால் இந்தப் படம் இன்னுமொரு உயரத்தைத் தொட்டிருக்கும்.
மொத்தத்தில் இந்த ரோமியோ ‘காமெடி ரசிகர்களுக்கானது’
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக – திமுக மோதல்… “அண்ணாமலையின் மிரட்டல் கோவையில் எடுபடாது”: கணபதி ராஜ்குமார்
ஹை ஸ்பீடில் தங்கம் விலை: சவரன் 54 ஆயிரத்தை கடந்தது!
சிதம்பரத்தில் திருமா… வித்தியாசக் காட்சிகள்: கள நிலவரம் சொல்லும் காந்தி
ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!