தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தில், கைதிகளைத் தப்பவிட்டுவிட்டு பின்னர் பிடித்ததுபோல நாடகமாடுகிறார்களோ என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா சந்தேகம் எழுப்பியுள்ளார். “ஃபுல் டிராமா! ஸ்கிரிப்ட் எங்கேயோ வருது” என்றும் தவெக அரசை அவர் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் அவதூறாகப் பேசியதாகக் கூறி, கடந்த செப்டம்பர் 12-ந் தேதி தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விஜய் குறித்து ஆ.ராசா அவதூறாகப் பேசியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் இருவரும் இன்று (அக்.27) சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்த விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் ஆ.ராசா. அப்போது விசாரணை எப்படி நடந்தது என்ற கேள்விக்கு, “ரொம்ப நல்லா போச்சு… ரொம்ப நல்லா போச்சு… ரொம்ப ரொம்ப நல்லா போச்சு!” என்று சிரித்தபடியே பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அப்பா பேர் என்ன? வயசு என்ன? எத்தனை குழந்தைகள்? எத்தனை அண்ணன் தம்பி? எந்த ஊர் சொந்த ஊர்? சொந்த ஊர்ல நிலம் இருக்கா? சொந்த ஊர்ல வீடு இருக்கா?ன்னு கேட்டாங்க. இதுலயே ஒரு 25 நிமிஷம் போச்சு. மீதி 25 நிமிஷம், சைதாப்பேட்டையில நீங்க பேசினீர்களே, பேசும்போது கலவரம் நடந்துச்சா? கொந்தளிச்சாங்களா? யாராச்சும் மனம் புண்பட்டாங்களா? அப்படின்னு கேட்டாங்க. அது நீங்கதானே பாதுகாப்பு கொடுத்தீங்க? உங்களுக்குத்தானே தெரிஞ்சிருக்கும்? எங்களை போய் கேட்கிறீர்களே, நான் வந்தேன், அமைதியா இருந்தது, பேசிட்டு போயிட்டோம்னு சொன்னோம். வேற ஒண்ணும் புதுசா இல்ல” என்றார்.
மேலும், “எப்.ஐ.ஆர்- என்கிட்ட குடுக்கல. கம்ப்ளைன்ட்டும் என்கிட்ட குடுக்கல. அதான் கேட்டேன். உங்க பேர்ல இதான் எப்.ஐ.ஆர், இதான் கம்ப்ளைன்ட்னு சொல்லிட்டு என்கொயரிக்கு கூப்பிடணும். கம்ப்ளைன்ட் காப்பியும் குடுக்கல. எப்.ஐ.ஆரும் பொதுவெளியில இல்ல, வெப்சைட்ல இல்ல. கேள்வி கேக்குறாங்க, எப்படி பதில் சொல்ல முடியும்? ஆர்ப்பாட்டத்துக்கு 200 போலீஸ்காரங்க வந்தாங்களே எப்படி வந்தாங்க? பந்தோபஸ்து கொடுத்தாங்களே எப்படி கொடுத்தாங்க? பந்தோபஸ்து கொடுத்துதானே நடத்துனோம்? சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இருக்கிற அலுவலர்கள் எல்லாம் நல்லவங்க, ரொம்ப பாவம். எங்கிருந்தோ போன் வருது. அவங்களை பார்த்தா பாவம். மன்னிச்சுடுவோம், மன்னிச்சு விட்டுடுவோம்” என்று கூறினார்.
தவெக அரசைக் கடுமையாக விமர்சித்த ஆ.ராசா, “திமுகவை இந்த அரசால் ஒண்ணும் பண்ண முடியாது. திமுகவைப் பத்தி அவங்களுக்கு தெரியாது. திமுகவைப் பத்தி தெரியாது, ஒண்ணும் கிழிக்க முடியாது. அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுன்னு நேத்து நடந்த டிராமா, இன்னைக்கு நடந்த டிராமா, நாளைக்கு சில டிராமாக்கள் வரும். இதெல்லாமே சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு, ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆட்சி.. இதை எல்லாம் மூடி மறைக்க இந்த மாதிரி ஒரு டைவர்ஷன். தினம் ஒரு அரெஸ்ட்” என்று குற்றம்சாட்டினார்.
விசாரணையால் மன உளைச்சல் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, “எங்க முகத்தைப் பார்த்தா அப்படியா தெரியுது? சும்மா போய் ஜாலியா ஏசி போட்டாங்க, ஒரு தடவை காபி கொடுத்தாங்க, கடைசியா லேட் ஆகுதுன்னு பிஸ்கட் கொடுத்தாங்க. எங்களுக்கு போய் மன உளைச்சல்ங்குறீங்க, அவங்களுக்குத்தான் சார் மன உளைச்சல். ஏன் சார் வம்புக்கு இழுக்கிறீங்க?” என்று பதிலளித்தார்.
மேலும், சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆ.ராசா, “சார் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. இவங்களே தப்பி ஓடவிட்டுட்டு பிடிச்ச மாதிரி காமிச்சு… அதாவது நிரம்பாத அணைக்கு இன்ஸ்பெக்ஷன்.. ஓடிப்போனவங்களை எங்க பிடிச்சீங்க? ஃபுல் டிராமா! ஸ்கிரிப்ட் எங்கேயோ வருது. பாவம் சார் முதலமைச்சர், சொல்லிக்குடுங்க. தம்பி நல்ல தம்பி, விடுங்க” என்று கூறினார்.
