நெல்லையப்பர் கோயிலில் ஜிங்குச்சா பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்ட ஜோடியின் மீது சைபர்கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. a jodi dance reels at nellaiappar temple case filed
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தின் முதல் சிங்கிளான ’ஜிங்குச்சா’ பாடல் சமீபத்தில் வெளியானது. கமல், சிம்பு, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடனமாடியிருந்த இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த பாடலுக்கு தற்போது பிரபலங்கள் முதல் பலரும் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த ரீல்ஸ் மோகம் தலைக்கேறி, ஜிங்குச்சா பாடலுக்கு திருநெல்வேலி நெல்லைப்பர் காந்திமதி கோயில் வளாகத்தில் ஒரு ஜோடி நடனமாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது. கோவில் வளாகத்தில் போட்டோ, வீடியோ எடுக்க ஏற்கெனவே தடை அமலில் உள்ள நிலையில், புனிதமான கோயில் வளாகத்தில் இவ்வாறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் புனித தலமான நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் இதுபோன்ற அநாகரிக செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் சிவமணி கோரியுள்ளார்.