தூத்துக்குடியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் மனைவி வனிதா, இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வசந்தி ஆகியோர் இருந்தனர். காரை பழனி என்பவர் ஓட்டி வந்தார்.
திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னை நோக்கி புறப்பட்ட அவர்களது கார், தூத்துக்குடி எட்டையாபுரம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பாஸ்கர், அவரது மனைவி வனிதா, தாயார் வசந்தி மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாஸ்கரின் இரு குழந்தைகளான சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
