கடந்த 1996ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டித் தொடரில், பெங்களூருவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான காலிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து கொல்கத்தாவில் இலங்கை அணியுடன் அரையிறுதியில் ஆட வேண்டும். இந்தியா டாஸ் வென்று இலங்கையை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது.
இலங்கையின் மிரட்டும் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் முதல் ஓவரிலேயே பெவிலியனுக்கு அனுப்பிய இந்திய அணியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஸ்ரீநாத்தின் பந்தில் கலுவிதர்ணாவை தேர்ட் மேன் பகுதியில் மஞ்ச்ரேக்கர் கேட்ச் செய்தார். வெங்கடேஷ் பிரசாத் ஜெயசூர்யாவை கேட்ச் செய்தார். ஆனால், அடுத்து களம் இறங்கிய அரவிந்த டி சில்வா 47 பந்துகளில் 66 ரன்களும் மகாகானாமா 58 ரன்களும் எடுத்து இலங்கையின் இன்னிங்சை கட்டமைத்து விட்டனர். இலங்கை அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்தது.
இரண்டாவதாக பேட் செய்ய தொடங்கியது. இந்தியாவின் தரப்பில் சித்து 3 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய மஞ்ச்ரேக்கரும் சச்சினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சச்சின் 96 ரன்களில் வெளியேற, மஞ்ச்ரேக்கர் 25 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அசாரூதின் டக் அவுட் ஆனார். தொடர்ந்து, அனைவரும் வருவதும் போவதுமான இருந்தனர். கடைசியில் வினோத் காம்ப்ளியும் ஸ்ரீநாத்தும் களத்தில் இருந்தனர். வினோத் காம்ப்ளி இந்த தொடரில் சிறப்பாகவே ஆடியிருந்தார். ஒரு சதமும் அடித்திருந்தார். இந்த சமயத்தில் 10 ரன்களுடன் வினோத் காம்ப்ளி களத்தில் இருந்தார். அப்போது, இந்தியா 120 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனால், ஆட்டத்தின் முழு பாரமும் வினோத் காம்ப்ளி மீது இறங்கியது. இந்த சமயத்தில்தான் மைதானத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். வேறு வழியில்லாமல் ஆட்டத்தை ரத்து செய்து இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. களத்தில் இருந்து வினோத் காம்ப்ளி வெளியேறிய போது, கதறி அழுதபடி காணப்பட்டார். அப்போது, இந்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால், வினோத் காம்ப்ளியின் கிரிக்கெட் வாழ்க்கை அதற்கு பிறகுதான் வீழ்ச்சிக்குள்ளானது.
டிரெஸ்சிங் அறைக்குள் வினோத் காம்ப்ளி நுழைந்ததும், தோல்வியால் பகிரங்கமாக அழுததற்காக அஜய் ஜடேஜா , வினோத் காம்ப்ளியை கடுமையாக விமர்சித்தார்.
மீடியாக்களில் வினோத் காம்ப்ளி அழுத படம்தான் பெரிய அளவில் காட்டப்பட்டது. அதற்கு பிறகு, வினோத் காம்ப்ளியால் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போய் விட்டது. பிசிசிஐயும் அவரை ஒதுக்க தொடங்கி விட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் வினோத் காம்ப்ளி பற்றி , அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளது. வினோத் காம்ப்ளி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை .கால்களுக்கு பேலன்ஸ் கிடைக்கவும் இல்லை. சிகிச்சை பெற பணமில்லாமல் தவிப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதையடுத்து, வினோத் காம்ப்ளிக்கு சிகிச்சை அளிக்க 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணி வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அடிலெய்டில், ஸ்போர்ட்ஸ் டுடேவிடத்தில் கவாஸ்கர் கூறுகையில், ‘இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் எங்களுக்கு மகன்கள், பேரன்கள் மாதிரி. வினோத் காம்ப்ளி எனக்கு மகன் போலத்தான். அவருக்கு உதவி செய்ய வேண்டியது எங்களது கடமை. விரைவில் வினோத் காம்ப்ளிக்கு அனைத்து உதவிகளையும் செய்து வாழ்க்கையை சீராக வாழ வழி செய்வோம் ‘ என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
தமிழகத்தில் செயற்கை மின்வெட்டு: அண்ணாமலை
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு… வேலூரில் வறண்டு கிடக்கும் ஏரிகள்: என்ன காரணம்?