வேலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கடந்த சில நாட்களாகத் தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால், பாலாற்றில் இருந்து ஏரிகளுக்குத் தண்ணீர் திருப்பிவிடும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளாததால் வேலூரில் உள்ள ஏரிகள் வறண்டு கிடப்பதாகவும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வீணாகத் தண்ணீர் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஜவ்வாது மலைத் தொடரில் பெய்த கனமழையால் உத்திரகாவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிகப்படியான நீர்வரத்து பாலாற்றுக்கு வரப் பெற்றது.
வேலூர் பாலாற்றில் 2,000 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது. இதில், சுமார் 70 சதவிகிதம் நீராதாரம் அகரம் ஆற்றிலிருந்து கிடைக்கிறது.
மழை விட்டாலும் வனப்பகுதியிலிருந்து வரும் நீரால் பாலாற்றில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை குறிப்பிடத்தக்க அளவுக்கு நீர்வரத்து இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எனவே, பாலாற்று நீரை ஏரிகளில் முழுமையாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதில், நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடினாலும் ஏரிகளுக்கான நீர்வரத்து குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
உதாரணமாக, வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 101 ஏரிகள் உள்ளன. இதில், அகரம் ஏரி, பெண்டு தாங்கல், கனகந்தாங்கல், பொம்ம சமுத்திரம், கீரைசாத்து, வீரவர்தாங்கல், வீராந்தாங்கல், பாத நல்லூர், வெப்பாலை, முகமதுபுரம் நாகலேரி, ஒக்கனாபுரம், கத்தாழம்பட்டு உள்ளிட்ட 12 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
பாலாற்றை நம்பியுள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு இன்னமும் நீர் வரத்து இல்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல், வேலூர் மாநகருக்கு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும் சதுப்பேரி ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் பாலாற்றிலிருந்து வருகிறது. இந்த வரத்துக் கால்வாய் மட்டம் உயரமாக இருப்பதுடன் பாலாறு படுகை தாழ்வாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாலாற்றில் இருந்து வரத்துக் கால்வாய் முறையாகத் தூர்வாராததால் பாலாற்றிலிருந்து வரத்துக் கால்வாய்க்குச் சிறிது தொலைவு செல்லும் வெள்ள நீர் மீண்டும் ஆற்றுக்கே திரும்பி விடுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில், ‘‘பாலாற்றிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிடும் பணிகள் எதையும் செய்யவில்லை’’ என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வீணாகச் செல்லும் பாலாற்று நீரை ஏரிகளுக்கு விரைந்து திருப்பிவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் கனமழை வரை!
ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஏற்படும் முகவாதம்: தப்பிக்க என்ன வழி?
பியூட்டி டிப்ஸ்: பருவைப் போக்க உதவுமா லேசர் சிகிச்சை?
டெல்டா மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை!
வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி!