முதல்வர் விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் 1.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என உயர் நீதிமன்றத்தில் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
2026 பொங்கல் சமயத்தில் வெளியாக வேண்டிய, முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை. இந்தசூழலில் தவெக ஆட்சி அமைத்து நடிகர் விஜய், முதல்வரானார்.
இதற்கிடையே ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பெறும் முன்பே இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரில், சென்னை சைபர் கிரைம் போலீஸார், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர்.
இதில் 4ஆவது நபராக குற்றம்சாட்டப்பட்ட ரஜினி, 11ஆவது நபராக குற்றம்சாட்டப்பட்ட ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி குமரப்பன் முன்பு இன்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20 கோடி பேர் பார்த்துள்ளனர் .
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தலைமறைவாக உள்ளனர். அதோடு இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைக்கக்கூடும்.
வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் கோரியவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
