குழந்தைத் திருமணம் நடந்திருந்தாலும், அதற்கு முறைப்படி விவாகரத்து பெறுவது அவசியம் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 1995ம் ஆண்டு மைனராக இருந்தபோது, தனக்குத் திருமணம் நடந்ததாகவும், அதிலிருந்து சட்டப்படி தனக்கு விவாகரத்து பெற்றுத் தரவேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அதில், குழந்தை பருவத்தில் நடந்த திருமணம் என்பதால், அது சட்ட அங்கீகாரம் பெறுவதில்லை. இதனால், அது தானாகவே செல்லுபடியாகததாக மாறிவிடுகிறது. இதனால், விவாகரத்து தேவையில்லை என்று கூறியிருந்தது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிகுமார், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், குழந்தைத் திருமணமாக இருந்தாலும், இந்து சட்டப்படி முறைப்படி விவாகரத்து பெறவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கை திருநெல்வேலி குடும்பநல நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
