மின்னம்பலம் நிருபர் குழு.
இந்த மழை போய் வெயில் வந்தால் போதும்! என்பது போன மாத சென்னை மக்களின் மன நிலை?
முப்பது நாட்கள் முழுமையாகக் கடந்து விடவில்லை. ‘’ இப்பமே இந்தக் கொளுத்து கொளுத்துதே ஏப்ரல், மே மாசத்துல நம்மள எரிச்சுப் போடுமோ” இது இப்போது கேட்கத் துவங்கியிருக்கும் சென்னை வாசிகளில் குரல்!
மழை வந்தால். வெயிலைத் தேடுவதும் வெயில் வந்தால் மழையைத் தேடுவதும் மனித இயல்பு, ஆனால் நாம் விரும்பும் மழையும், வெயிலும் இப்போதெல்லாம் வருவதே இல்லை!
பருவமழை பொய்த்து அதிக மழை, அதிக வெப்பம். வருடக் கணக்காய் மழையே இல்லாத நிலை இதுதான் உலகம் எதிர்கொண்டிருக்கும் பருநிலை மாறுபாடு! ஆண்டு முழுவதும் அதிக கோடைக்காலத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் மேலும் மேலும் வெப்ப நாடுகளாய் மாறிக் கொண்டிருக்கிறது என்று அபாயமணி அடிக்கிறது ஆய்வுகள்.
2015 – அதிக வெப்பம், அதிக மழை.
சமீபத்தில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்ட அறிக்கையும் இதையே தகவல்களாக… புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளாக வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் கடந்த 2015-ம் ஆண்டு உலக அளவில் வரலாற்றில் இதுவரை காணாத அதிவெப்பம் கொண்ட ஆண்டாக இருந்துள்ளதை உணர்த்தி உள்ளது. இதில் இந்திய நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆய்வுக்காக உலகின் பலபகுதிகளில் இயங்கி வரும் 6300 வானிலை ஆய்வு மையங்களில் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது நாசா. 1951-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு உலகின் ஆண்டு சராசரி வெப்பநிலையை கணக்கிட்டது. மற்ற வானிலை ஆய்வு மையங்களில் இருந்து பெற்ற தகவல்களை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கடந்த 2015-ம் ஆண்டு வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதிகம் மழை கொட்டித் தீர்த்த ஆண்டாகவும் 2015 பதிவாகி உள்ளது.
2000-வது ஆண்டுக்கு பின்னர், ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகள் மிக அதிக வெப்பநிலையைக் கொண்ட ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு உள்ளன. இந்த பருவநிலை மாற்றத்துக்கும் பாதிப்பிற்கும் உள்ளாகாத பகுதி என்று உலகில் எதுவுமே இல்லை என்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கிறது.இந்த காலகட்டத்தில், உலக அளவில் பின்லாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் வரலாறு காணாத வெப்பத்தை அனுபவித்து உள்ளன.
இந்தியாவில் வெப்பம்.
இந்தியாவில் கடந்த 200 ஆண்டுகளில், சராசரி வெப்பநிலையானது 2.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து உள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. வெப்ப நிலை குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய கடந்த 135 ஆண்டுகளில், 2015-ம் ஆண்டே அதிக வெப்பம் தகித்த ஆண்டாக உள்ளது. ஆனால் அதை விட வருகிற 2016 -ம் ஆண்டு அதிக அளவான வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வுகள்.
நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பையின் சராசரி வெப்பநிலை, கடந்த 1891-ம் ஆண்டில் இருந்து மெல்ல அதிகரித்து ஆண்டு சராசரி வெப்பநிலையானது 2.4 டிகிரி செல்சியஸ் உயர்ந்து இருக்கிறது. தலைநகரான டெல்லியின் வெப்பநிலை 1930-ம் ஆண்டில் இருந்து உயர்ந்து சராசரி ஆண்டு வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த பெர்கெலேஎர்த் டாட் ஆர்க் என்ற தனியார் இணைய தளம் ஒன்று நடத்திய ஆய்வில், இந்தியாவின் வெப்பநிலை கடந்த 200 ஆண்டுகளில் 2.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிவியலாளர்களில் ஒரு பகுதியினர் இந்த பருவநிலை மாற்றத்துக்கு இயற்கையின் பங்களிப்பே அதிகம் காரணம் என்று வாதிடுகின்றனர். கடந்த ஆண்டு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட ’எல் நினோ’ என்ற இயற்கை காலநிலை நிகழ்வே, 2015-ம் ஆண்டில் உலகின் பல பகுதிகளில் வரலாறு காணாத வெப்பம் மற்றும் மழை கொட்ட காரணம் என்று கூறியுள்ளனர். இந்த எல்நினோ பாதிப்பு இந்தியாவின் தெற்கு முதல் வடக்கு வரை அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் வரலாறு காணாத மழை பெய்தது. வட மாநிலங்களில் குறைவான மழையையும், அதிக அனல் பறக்கும் வெப்பத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால் அதே நேரத்தில், இந்த 2015-ம் ஆண்டுக்கான வெப்பநிலை மாற்றத்துக்கு வேண்டுமானால் எல்நினோ காரணமாக இருக்கலாம், ஆனால் கடந்த 2000-வது ஆண்டு முதல் பல ஆண்டுகள் அதிக வெப்பம் தகித்த ஆண்டுகளாக இருந்ததற்கு, மனித செயல்பாடுகளே காரணம் என்று மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் உறுதியாக அடித்துக் கூறியுள்ளனர். காடுகளை அழித்தது, அதிக அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் போன்ற பல்வேறு மனித செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது உலக அளவில் நிலப்பரப்பு அதிகம் உள்ள வட துருவப் பகுதிகளிலேயே வானிலை ஆய்வு மையங்கள் அமைந்துள்ளன. இதில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலமே, இந்த ஆய்வு முடிவுகள் நமக்கு கிடைத்துள்ளன.
ஆனால் அதிக கடல் பகுதி கொண்ட தென் துருவத்தின் தற்போதைய பருவநிலை மாற்றம் குறித்த தகவல்கள் இல்லை என்பதையும், கடல் வெப்பநிலை உயர்வு கணக்கிடப்படவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். இதனால் கடலில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. மேலும் இதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
சென்னை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
இந்தியாவில் வட மாநிலங்கள் அதிக குளிர், அதிக வெப்பம் என சிரமப்பட்ட போதும் கூட சென்னை அளவு கடந்த பருவ மாறுபாடுகளுக்கு உள்ளாகவில்லை. கடைசியாக 1910 -ல் அதிக வெப்பம் பதிவானதாகவும், அதன் பின்னர் 2003 -ல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை சென்னை எதிர்கொண்டதே மிக மோசமான வெப்பமாக இருந்தது. வெப்பம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் சராசரி வெப்ப நிலை சென்னையில் அதிகரித்துச் செல்கிறது.பொதுவாக குளிர்காலம் எனப்படும் இம்மாத ஜனவரியில் 31 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவாகிறது. இப்போதே நிலமை இப்படி என்றால் வரவிருக்கும் கோடை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப வெயில் சென்னையை தாக்கப் போகிறது. வரலாறு காணாத மழை ஏற்படுத்திய பேரிடரில் இருந்து சென்னை இன்னும் முழுயாக மீளாத நிலையில் வரவிருக்கும் வெப்பத்தைத் எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறோம்.
