பருவமழை பொய்த்து போனதால் நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மழை வேண்டி வேண்டி தமிழகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு அதிகமான பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல் நினோ காரணமாகக் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான பருவமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பினை குறிக்கிறது.அதாவது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாக இருக்கும் அந்த பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் அதிக வெப்பநிலையைத்தான் எல் நினோ என்று சொல்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ‘பருவ மழை எப்படி இருக்குமோ?’ என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் மட்டும் அல்ல, பொதுமக்களிடமும் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவது கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த 2015–2016 பயிர் ஆண்டில் (ஜூன் – ஜூலை) பருவ மழை பற்றாக்குறை காரணமாக 10 மாநிலங்கள் வறட்சி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பருவ மழை குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறையின் இயக்குனர் லட்சுமன் சிங் ரத்தோர், ‘ எல் நினோ காரணமாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான பருவமழை பெய்யும். இந்தியாவின் சராசரி பருவமழையின் அளவு 89 செ.மீ ஆகும். ஆனால் இந்த ஆண்டு 96 சதவீதம் பருவ மழை பெய்யும். இது இயல்பை விட அதிக அளவாகும். விவசாயிகளின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆனால் வட கிழக்கு இந்தியா, தென் கிழக்கு இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் இயல்பை விடப் பருவமழை சற்று குறைவாகவே இருக்கும். மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் நல்ல மழை பெய்யும். மேற்கு கடலோர பகுதிகளிலும், மத்திய மண்டல பகுதிகளிலும் பருவ மழை நன்றாகப் பெய்யும். சில இடங்களில் மழை மிக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு பருவ மழை இயல்பை விட அதிகமாகப் பெய்யும்’ எனத் தெரிவித்துள்ளார்.
