”நீ நடிகனாக இருக்கவே லாயிக்கு இல்லை” – சகட்டு மேனிக்கு திட்டிய தயாரிப்பாளர்… யோகிபாபு பதில்!

Published On:

| By christopher

yogibabu reply to the angry gajaana producer

பட ப்ரோமோசன் நிகழ்ச்சிக்கு வராத நகைச்சுவை நடிகர் யோகிபாபுவை மேடையிலே வைத்து தயாரிப்பாளர் சகட்டுமேனிக்கு திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. yogibabu reply to the angry gajaana producer

ரம்மி புகழ் இனிகோ பிரபாகர் நாயகனாகவும், வேதிகா நாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘கஜானா’.

பிரபதீஷ் சாம்ஷ் இயக்கத்தில் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘கஜானா’ படத்தில் யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதில் இனிகோ, வேதிகா, சாந்தினி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்ட நிலையில் யோகிபாபு கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விழா மேடையிலேயே யோகிபாபுவை கண்டித்து தனது ஆதங்கத்தை வெளிப்படையாக தெரிவித்தார் தயாரிப்பாளர் ராஜா.

அவர் பேசுகையில், “ இந்த படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான ரோலில் நடித்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது, இந்த ப்ரோமோஷனுக்கு அவர் வந்து இருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. அவருக்கு 7 லட்சம் ரூபாய் போய் இருக்காது என்று அர்த்தம். பணம் போய் இருந்தால், நிச்சயம் அவர் வந்து இருப்பாரு.

இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம்! நான் நடித்த படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்றால் என்ன அர்த்தம். ஒரு நடிகனுக்கு தான் நடித்த படம் என்பது ஒரு குழந்தை போன்றது. ஒரு குழந்தையை வளர்க்கக் கூடிய பொறுப்பு இல்லையென்றால் நீ நடிகனாக இருக்கவே லாயிக்கு இல்லை. படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட நீங்க வரமாட்டீங்களா… இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு எல்லாம் உங்களுக்கு காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும்” என காட்டமாக பேசினார்.

தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நகைச்சுவை நடிகராக யோகிபாபு வலம் வரும் நிலையில் அவர் மீதான இந்த நேரடி குற்றச்சாட்டு பரபரப்பை எற்படுத்தியது.

இந்த நிலையில் யோகி பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ”சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தயாரிப்பாளர் ராஜா என்பவர் யார் என்றே எங்களுக்கு தெரியாது. பல ஆண்டுகளாக ‘கஜானா’ திரைப்படம் எடுக்கப்பட்டது.

தற்போது யோகி பாபு பிஸியாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் பல லட்சம் இழப்பை தயாரிப்பாளர்கள் சந்திக்க நேரிடும். இதை மற்ற பட குழுவினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் முடிந்த வரைக்கும் தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு யோகி பாபு சென்று வருகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share