தேவதர்ஷினி. சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் மாறி மாறி தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறவர். serials to cinema who is devadarshini
’காமெடியோ, சீரியசோ, எந்த பாத்திரத்திலும் நடிக்கத் தயார்’ என்பதனை இவரது நடிப்பு நமக்கு நிரூபித்துவிடும்.
நடிக்க வந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆனாலும் கூட, இன்றுவரை தோற்றத்தில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல் முகத்தையும் உடல்வாகையும் ஒரேமாதிரியாகப் பராமரித்து வருவது இன்னொரு ஆச்சர்யம். அந்த மெனக்கெடலும் புதுப்புது பரிமாணங்களில் வெளிப்பட வேண்டுமென்ற வேட்கையும்தான் இன்றும் தேவதர்ஷினியை வெற்றிகரமானவராக உலா வர வைக்கிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்து, ஊடக உலகில் கோலோச்சுபவர்களில் பலர் தொண்ணூறுகளிலோ, 2000க்கு பின்போ பிறந்தவர்களாக இருப்பார்கள். அதற்கு முன்பே, ‘நான் 80’ஸ் கிட்ஸாக்கும்’ என்று சின்னத்திரையில் முகம் காட்டியவர் தேவதர்ஷினி. serials to cinema who is devadarshini
இவரது பெற்றோர், சகோதரி என அனைவருமே கல்வியில் கெட்டி. அதனால், சிறு வயதில் இருந்தே படிப்புக்குப் பிறகே கேளிக்கைகள், விளையாட்டுகள், இதர கலையார்வங்கள் என்றிருந்தார் தேவதர்ஷினி.
கல்லூரியில் படிக்கும்போது, ‘சார்ட்டட் அக்கவுண்டண்ட்’ ஆக வேண்டுமென்பதே இவரது இலக்காக இருந்தது. ஆனால் ஜெஜெ தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனது அந்த கனவைத் தடம் புரட்டியது.
தொகுப்பாளராக இருந்தபோது கிடைத்த வரவேற்பு, தூர்தர்ஷனில் வந்த ‘கனவுகள் இலவசம்’ தொடரில் நடிக்கக் காரணமானது. அதனை ஏற்றுக்கொண்டார் தேவதர்ஷினி.

அதில் அவரது நடிப்பைக் கண்ட இயக்குனர் நாகா, ‘மர்மதேசம்’ தொடரில் நடிக்க வைத்தார். பிறகு ‘ரமணி வெர்சஸ் ரமணி பாகம் 2’இல் வாசுகிக்குப் பதிலாக தேவதர்ஷினியைக் களம் இறக்கினார். அந்த தொடர் ரசிகர்களிடையே பெரிய அளவில் ‘ஹிட்’ ஆனது.
அதன் தொடர்ச்சியாக, ‘விடாது கருப்பு’ தொடரில் நடித்தார் தேவதர்ஷினி. அதற்கான படப்பிடிப்பில்தான் சேத்தனை முதன்முறையாகச் சந்தித்திருக்கிறார். அதில் ஜோடியாக நடித்த இருவரும் பின்னர் வாழ்விலும் ஒன்றிணைந்தனர்.
இடைப்பட்ட காலத்தில் எத்தனை மனிதர்கள், நிம்மதி உங்கள் சாய்ஸ் 2, அண்ணாமலை, கோலங்கள் என்று பல சீரியல்களில் நடித்தார் தேவதர்ஷினி. அந்த காலகட்டத்தில் மலையாளம், தெலுங்கில் வந்த சில சீரியல்களிலும் இடம்பிடித்தார்.
இதற்கிடையே, ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் வழியே பெரிய திரையில் அறிமுகமாகிற வாய்ப்பு தேவதர்ஷினியைத் தேடி வந்தது. அந்த படத்தின் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா ‘ரமணி வெர்சஸ் ரமணி’யின் தீவிர ரசிகர். அப்படித்தான், அதில் நாயகன் தருண்குமாரின் சகோதரியாக நடித்தார் தேவதர்ஷினி.
அப்படம் வெளியாவதற்குள் கரு.பழனியப்பனின் ‘பார்த்திபன் கனவு’ முந்திக்கொண்டது.
பிறகு ‘காக்க காக்க’, ‘அழைகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’ என்று பல படங்களில் நடித்தார். சின்னத்திரை, பெரிய திரை என்று மாறி மாறி இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார்.

‘கண்ட நாள் முதல்’ படத்தில் பிரசன்னாவின் சகோதரியாக நடித்திருப்பார் தேவதர்ஷினி. அதில் இவருக்கான காட்சிகள் நான்கைந்து கூட இருக்காது. என்றபோதும், படம் முழுக்க வந்துபோன உணர்வைத் தரும் அவரது பாத்திரம்.
பிறகு மாதவனின் சகோதரியாக ‘ரெண்டு’, சிம்புவின் மதினியாக ‘சரவணா’ என்று முன்னணி நாயகர்கள் பலரோடு சேர்ந்து நடித்தார் தேவதர்ஷினி. ‘கிரீடம்’ படத்தில் அஜித் உடன் நடித்தவர், ‘வேல்’ படத்தில் சூர்யா உடன் மீண்டும் இணைந்தவர், பிறகு ‘பிகில்’ உட்பட மூன்று படங்களில் விஜய்யுடன் நடித்தார்.
மகள் நியதி கிடாம்பியைப் பிரசவித்த காலத்தில் மட்டும் நடிப்புக்குச் சிறியளவில் ‘பிரேக்’ விட்டிருக்கிறார் தேவதர்ஷினி. அதுவும் இரண்டு வாரங்கள் மட்டுமே. பிறகு, மீண்டும் சீரியல், சினிமா என்று இயங்க ஆரம்பித்துவிட்டாராம்.
இந்த காலகட்டத்தில் ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில் கணவர் சேத்தன் உடன் இணைந்து ஆடவும் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட இயங்குதலுக்குப் பின்னால் இவரது வலுவான மனோதிடம் இருக்கிறது. அதன்பின்னே, ‘பயன்பாட்டு உளவியல்’ துறையில் இவர் பெற்ற முதுகலைப் பட்டம் இருக்கிறது. ஆம், உளவியல் ரீதியாகச் சிந்தித்துச் செயலாற்றுகிற இயல்புதான் இன்றுவரை இவரை இடையறாது இயக்கி வருகிறது.
’அத்திப்பூக்கள்’ தொடரில் நடித்தபிறகு, இவர் சின்னத்திரையில் வந்த நடிப்பு வாய்ப்புகளை ஏற்கவில்லை. அதேநேரத்தில் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதன் பின்னே ‘காஞ்சனா’ படத்தின் வெற்றி இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அப்படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, தேவதர்ஷினியின் திரை வாழ்வை ஒட்டுமொத்தமாக மாற்றியது. தொடர்ந்து பல படங்களில் ‘காமெடி கேரக்டர்களில்’ நடிக்க பாதை அமைத்தது.
அந்த காலகட்டத்தில் தொடர்களில் வந்த வாய்ப்புகள் அனைத்தும் ஒரேமாதிரியாக அமைய, பெரிய திரை பக்கம் திரும்பிவிட்டார் தேவதர்ஷினி. 36 வயதினிலே, 96, ஜாக்பாட் என்று பல படங்கள் இவரை நினைவுகூரும் வகையில் ‘பிலிமோகிராஃபி’யில் சேர்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய சேர்க்கை ’லப்பர் பந்து’ மற்றும் ’மெய்யழகன்’. serials to cinema who is devadarshini
’லப்பர் பந்து’ படத்தில் ஹரீஷ் கல்யாணின் தாயாக வருவார். அதில், இவர் பேசுகிற ‘பைத்தியம், அவர் உனக்கு அண்ணன் இல்ல மாமனார்’ என்கிற வசனம் ரொம்பவே பிரபலம்.

‘மெய்யழகன்’ படத்தில் அரவிந்த் சாமியின் மனைவியாக நடித்தார் தேவதர்ஷினி. அதில் இவருக்கான காட்சிகள் குறைவென்றபோதும், ஹேமா என்ற பாத்திரமாகவே திரையில் தெரிந்தார். இயல்பு ததும்புகிற வகையில், நகரத்தில் வாழ்கிற ஒரு கிராமத்தானின் மனைவியாக வந்தார். அந்த படத்தில் வருகிற ‘மெய்யழகி’களில் ஒருவரானார்.
கணவர் சேத்தன் ஒருபக்கம் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்க, ‘விரைவில் நாயகியாக அறிமுகம் ஆவார்’ என்கிற விதத்தில் மகள் நியதியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பெருகிக் கொண்டிருக்க, அவர்களிருவரையும் இயக்குவதோடு தானும் இயங்கிக் கொண்டிருக்கிறார் தேவதர்ஷினி.
அந்த வகையில் ஒரு ‘நட்சத்திரக் குடும்பத்தின்’ பிரதிநிதி என இவரைச் சொல்லலாம். இப்படி ஒரே குடும்பத்தில் மூவருமே புகழ் வெளிச்சத்தில் இருப்பதும், அதனைச் சரிவரக் கையாள்வதும் மிகப்பெரிய விஷயம் தான்.

சமீப ஆண்டுகளாக ‘தி பேமிலி மேன்’, ’தலைவெட்டியான்பாளையம்’, ‘ஐந்தாம் வேதம்’ என்று ஓடிடி சீரிஸ்களிலும் இவர் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இன்னொரு தலைமுறைக்கும் தெரிந்தவராக மாறியிருக்கிறார்.
சின்னத்திரை, பெரியதிரை என்று இரண்டிலும் முத்திரையை பதித்திருக்கிற தேவதர்ஷினி, இனிவரும் காலங்களில் தனது நடிப்பினால் மேலும் பல ஆச்சர்யங்களைத் தரக்கூடும். அதற்கான வாய்ப்புகள் அனேகம் என்பதாக இருக்கிறது இதுவரை சாதித்தவை..! se rials to cinema who is devadarshini
