ஸ்ரீராம் சர்மா
பறக்க முடிந்தவைகள் எல்லாம் பறவைகள் ஆகிவிட முடியாது.
அட, ஆடிக் காற்று அடித்து வீசினால் சுள்ளியும் பறக்கும். சுடலையங்காட்டுச் சாம்பலும்தான் பறக்கும்.
இதுகாறும் எவரோடும் நான் சித்தாந்த ரீதியில்தான் முரண்பட்டு எழுதியிருக்கிறேன். யாரொருவரையும் தனிப்பட்டுத் தாக்கி எழுதியதில்லை. தேவையும் இல்லை. ஆனால், இன்று நட்புக்காக, இலக்கியக் கீழ்மையை மறுப்பதற்காக சற்று எல்லை தாண்டுகிறேன். மின்னம்பலத்தார் மன்னிக்க !
புகழுடைய பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான பேரன்பிற்கினிய அரவிந்தன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனந்தமான ஞாலப் பெருவெளியில் ஆழக் கரைந்து மோனம் கண்டு கொண்டிருக்கிறார் போலும்…
மின்னம்பலத்தில் அவர் இணை ஆசிரியராக இருந்தபோது எனக்குப் பழக்கம். குறைந்த நாட்கள்தான் எனினும் நிறைந்த நட்பு எங்களுக்குள் இருந்தது.
அன்றொரு நாள் திருவல்லிகேணியின் நீண்ட நெடிய அக்பர் சாகிப் தெருவில் அமைந்திருக்கும் எனது நண்பனின் கடை அருகில் எனது காரை உரிமையோடு நிறுத்தி விட்டு, காசி விநாயகா மெஸ்ஸில் மதிய உணவு கொள்ளச் சென்ற அந்த நடைப் பொழுதில்…
“இவ்வளவு ஜாலியான ஆளு, ஏன் இப்படி ரொம்ப சுருக்கிக்கிட்டு உள்ளயே இருக்கீங்க? வெளியில வாங்க. எல்லாரோடும் பழகுங்க…” என அறிவுறுத்தினார். “பழகிப் போச்சுங்க. இது சௌகரியமா இருக்குங்க…” என்றேன்.
எங்கோ பார்த்தபடி மெல்லச் சிரித்து வைத்தார். அவ்வளவுதான் பதில். அதுதான் அரவிந்தன் சார்.
விஸ்தாரமாகப் படித்தவர். விவரமுள்ளவர். சக எழுத்தாளர்களின் படைப்பை வஞ்சனையின்றி வாழ்த்துபவர். தன்முனைப்பு கிஞ்சித்தும் இலாது வாஞ்சையாய் பழகுபவர்.
இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும் அவரது முகத்துக்குப் பின்னே பெரும் கொண்டாட்டங்கள் உண்டு. அவைகள் வெளிப்படும் தருணங்கள் மிக அழகானதாகவே அமைந்திருந்தன.
அரவிந்தன் சாருக்கான அஞ்சலியை மின்னம்பலம் வெளியிட்டுவிட்டது. அவருடன் பழகிய பலரும் தங்களது நெகிழ்ந்த நினைவுகளை பதிந்தபடியே இருக்கின்றார்கள்.
அப்படியானதோர் பதிவின் சுட்டியைத்தான் அமேரிக்காவில் வாழும் எனது பால்ய நண்பன் ஒருவன் எனக்கு அனுப்பியிருந்தான். “என்ன கருமம் இது?” என்னும் குறிப்போடு…
என்ன வேண்டுமாம் இவனுக்கு எனும் கேள்வியோடு உள்ளே சென்று பார்த்தால் – ஜெயமோகனால் பதியப்பட்ட அரவிந்தன் அவர்களுக்கான அஞ்சலி போன்றதொரு பாசாங்குப் பதிவு அது!
அட, இந்து ஞான மரபென்றெல்லாம் பேசித் திளைக்கும் ஜெயமோகனா அந்தப் பதிவை எழுதினார்? அந்தப் பதிவுக்கும் அஞ்சலி எனும் சொல்லுக்கும் எந்த சம்பந்தமுமேயில்லையே எனத் துணுக்குற்றுப் போனேன் !

ஜெயமோகனைப் பற்றி ஓரளவுக்குக் கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்சம் உள் சென்று அவரை ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனம் சலித்துப் போனது.
என்ன மாதிரியான குணம் இது? எந்த வழியே வந்திருக்கும் இது? வந்த வழி இந்து ஞான மரபுதான் என யாரேனும் கொண்டு விடுவார்களேயானால் அது அந்த இந்து ஞான மரபுக்கே இழுக்கல்லவா? அவமானமல்லவா?
நேரடியாக ஜெயமோகனிடமே வருகிறேன்…
ஏன் அப்படிப் பதிந்தீர்கள் ஜெயமோகன்? அப்படியானதொரு அஞ்சலியை பதியச் சொல்லி யார் உங்களிடம் அழுதது? அந்தப் பதிவு முழுதும் அமானுடம் அல்லவா ஜெயமோகன்? விரித்துச் சொன்னால் உணர்ந்து கொள்வீர்களா? கவனியுங்கள்.
ஓரு மனிதர். ரசனையாளர். எழுத்தாளர். பத்திரிக்கையாளர். மொழிபெயர்ப்பாளர். படைப்பாளர். இந்தியா டுடே உட்பட பல பத்திரிக்கைகளின் எடிட்டோரியலில் பங்காற்றி இன்று காலச்சுவடின் பதிப்பாசிரியராக நின்று மறைந்தவர்.
அப்படிப்பட்டவரை உங்களுக்கான வாசகர்களிடம் எப்படி அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும்?
“அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார்.” என்றா பதிந்து வைப்பீர்கள்?
‘ஆஹா, தொழில் செய்தார் என்றுதானே சொன்னேன். தொழில் செய்வது ஒரு குற்றமா?’ என்றெல்லாம் மூன்றாந்தர வியூகத்தோடு இல்லாத தோகையை தூக்கி விரித்தாடி நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடும். அல்லது உங்களது அடிப்பொடிகளை ஏவி ஆடிக் காட்ட சொல்லக் கூடும். ஆயினும், அது குற்றம்தான்.
ஆம், பொது வெளியில், தனது எழுத்துழைப்பால் அறியப்பட்ட ஒரு இலக்கியவாதியின் ஆரம்ப கால வாழ்வாதாரப் போராட்டங்களை முன்னிறுத்தி அடையாளம் காட்டுவது அற்பத்தனமாகும்.
ரிஷிமூலம் – நதிமூலம் ஆராயாதே என்பது இந்து ஞான மரபின் அறிச்சுவடிப் பாடமல்லவா ஜெயமோகன்?
அவர் மேல் உங்களுக்கு இருக்கும் ஏதோவொரு காழ்ப்புதான் குயுக்தியாக இப்படி வெளிப்படுகிறது என்றே அறிவுலகம் கொள்ளும் அல்லவா?
அடுத்து,
“அவரும் அவரது தமையனும் அவரது தந்தை உருவாக்கிய மூன்று குடும்பங்களின் பொறுப்பையும் ஏற்று உழைத்து முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அவர் கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது.” என்கிறீர்கள்.
என்ன சொல்ல வருகிறீர்கள் ஜெயமோகன்? அவரது தந்தையார் எழுத்தாளர்தானே? நீங்கள் யார்? அவரைக் குறித்துச் சொல்ல உங்களிடம் வேறு ஏதும் இல்லையா? சக மனிதனின் பரம்பரை விவரத்தை – அவரது கோத்திரத்தை முகர்ந்து பார்ப்பதில் அப்படி என்ன ஆனந்தம் உங்களுக்கு?
அரவிந்தனின் எழுத்தை தெரிந்த அளவுக்கு அவரை நேரில் கண்டவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் அவரது உடற் குறைபாட்டைச் சொல்லி அரவிந்தனுக்கான மனச் சித்திரத்தை இலக்கியத்தில் இருந்து திசை திருப்பிக் காட்டி நீங்கள் அடையப் போவதுதான் என்ன? அதுபோன்றதான மன மைதுனம் இகழ்ச்சிக்குரியதல்லவா?
அதுசரி, இப்படியாகப் பதியும் உங்களை போன்றதான கேரக்டர் ஊருக்கு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அது, சந்தை, சலூன் கடை, டைலர் கடை, ஆடு வெட்டுமிடம், அக்கிரகாரம், லாட்ஜ் படிக்கட்டுகள், சுடுகாட்டு வீதிகள் என எல்லா பக்கமும் சுற்றிச் சுற்றி வந்து தகவல்கள் சேகரித்தபடியே சத்திரச் சாவடியில் புரண்டு புரண்டு படுத்தபடி காத்திருக்கும்…
வாய்ப்பொன்று அமையும்போது “எனக்கு எல்லாம் தெரியும். எனக்குத் தெரியாதது என்ன உண்டு இங்கே? போனது வந்தது சொல்லட்டுமா, பூர்வீகம் சொல்லட்டுமா?” என்றெல்லாம் கடகடவெனக் கக்கித் தீர்த்துவிடும். சுற்றி இருக்கும் சாமானியர்கள் தன்னை ஆச்சரியமாகப் பார்ப்பதில் ஒரு கிக் அந்தக் கேரக்டருக்கு. அவ்வளவுதான்.
பதற்றப்படாமல் கேளுங்கள், இடைநிலை பத்தாம் பசலிகளுக்கென்று ஓர் குணமுண்டு.
பண்ணி பண்ணி அந்த பாகவதர் ஒரு மணி நேரத்துக்கும் மிக விஸ்தாரமாக கல்யாணி ராகத்தைப் பிழிந்து பாடியிருப்பார். அரங்கம் அதிர கரவொலி எழும்பியிருக்கும்.
ஆனால், அதைப் பற்றிப் பேசாமல், “காஞ்சீவரம் பாகவதருக்கு மூக்கு கொஞ்சம் கோணை போல..?” என்றபடியே சபா வாசலில் வேட்டிக்குள் சொரிந்து கொண்டிருக்குமாம் ஒரு கேரக்டர்.
அப்படிப்பட்ட கெக்கலிக் கேரக்டர் ஒன்று என் நண்பர் அரவிந்தனுக்கான அஞ்சலியை எழுதியதும், அதை என் நண்பன் என் கவனத்துக்கு கொண்டு வந்ததும் துரதிர்ஷ்டமே.
மேலும், “அவர் கல்கியை அப்போதுதான் வாசித்திருந்தார். ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன். அதன்பின் அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்.” என்று மிக எளிதாகக் கடந்து போகிறீர்கள்.
அவர் கல்கியை ‘அப்போது’தான் வாசித்திருந்தார் என நீங்கள் அறுதியிடுவது எந்த ஆதாரத்தை வைத்து? அவற்றை செம்மை செய்தேன் என்றால் எவற்றை என்பதையும் செம்மை செய்த ‘விதம்’ என்ன அதன் ஆழம் என்ன என்பதையும் துளியாவது விளக்கி ஆக வேண்டும் அல்லவா?
சொல்லுங்கள். உதிரித் தாளை சேகரித்து விற்கும் கடைநிலை வியாபாரி ஒருவர் நேரடியாக இந்தியா டுடேயில் ஆசிரியர் ஆவது சாத்தியமானதா? அவ்வளவு எளிதானதா? ஆம் எனில் அது எங்ஙனம் என்பதை விளக்கியாக வேண்டும் அல்லவா? அல்லவெனில், நீங்கள் ஓர் அறிவுக் கோழை ஆகிவிடுவீர்கள்.
கவனியுங்கள் ஜெயமோகன்.
அரவிந்தன் இன்று நம்மிடையே இல்லை. தன்னைப் பற்றி சொல்லப்படும் கருத்துக்களை மறுதலித்து எழுத வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடக்கும் ஒரு மனிதரைப் பற்றி எழுதும் போது இரண்டு முறை அல்ல இருநூறு முறை யோசித்தாக வேண்டும் அல்லவா?
அதற்கு இந்து ஞான மரபெல்லாம் தேவையில்லை. ஒரு கிராமத்து சம்சாரிக்கு இருக்கும் அடிப்படை நாகரீகம் போதும். அதைக் கூட தொலைத்து விட்டீர்களே ஐயா?
ஒரு பத்திரிக்கையாளன் – படைப்பாளன் தனது எழுத்துழைப்பால் மேலேறி வந்த விதத்தை இதுபோன்று பெரியண்ணன் மனப்பான்மையோடு அலட்சியப்படுத்தும் உங்களை காலம் கழுவி ஊற்றிவிடக் கூடும். கவனம்.
மலையாளக் கரையோரத்தில் மல்லாந்து கிடக்கும் வார்தைகளை எல்லாம் பொறுக்கி வந்து தமிழ்ச் சூழலின் மேலெறிந்து – தமிழ் இலக்கணத்துக்குள் அடங்காத, அர்த்தமற்ற, ஆயாசம் தரும் ‘ரெண்டும் கெட்டான்’ வாக்கியங்களை ஓயாமல் அமைத்து – தமிழகத்தின் முதல் தலைமுறை வாசகர்களை அடித்துக் குழப்பிக் காசு பார்க்கும் மூன்றாந்தர மொழி வியாபாரி என உங்களைத் தூற்றிவிடக் கூடும். கவனம்.
ஆம், டாக்டர். வி. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்பனுவத்தை தொட்டெழுதி விருது வாங்கிய உங்களுக்கு, அரவிந்தனின் பங்களிப்பு புரியாமல் போனதில் ஆச்சரியமில்லை எனத் தள்ளிவிட்டுவிடும்! கவனம்.
அதுமட்டுமா, குற்றம் செய்பவன். துப்பு வைத்துவிட்டுச் செல்வது போல் அடுத்துச் சொல்கிறீர்கள்..
“புதிய காலச்சுவடு அணியுடன் அவர் இணைந்த பின் அந்த தொடர்பு இல்லாமலாகி, என் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார். எப்போதாவது ரயில் நிலையங்களில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டால் ஒரு சில சொற்களை பெரும்பாலும் நானே சென்று பேசுவதுடன் தொடர்பு நின்றது.”
அது என்ன எதிர்மன நிலை? எதனால் உண்டானது? உங்களை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு நீங்கள் அவருக்கு செய்ததென்ன? நீங்களே வலியச் சென்று பேசக் கூடிய நிலையில் இருந்ததோர் ஆளுமைக்கு, சரி வேண்டாம் ஒரு நட்புக்கு இப்படியானதொரு அஞ்சலியையா எழுதுவீர்கள்?
அவருக்கான அஞ்சலியில் அவரது எழுத்து பற்றியோ, அவரது ரசனை பற்றியோ, பத்திரிக்கை உலகுக்கான அவரது பங்களிப்புப் பற்றியோ ஒரு வார்த்தை கூட இல்லையே ஐயா?
உங்களைத் தவிர வேறு இலக்கியவாதிகளே தமிழகத்தில் இல்லை என்னும் அளவுக்கு முற்றிவிட்டீர்களா? இவ்வளவுதான் முடியும் என்றால் இப்படி ஒரு அஞ்சலியை எழுதாமலேயே இருந்திருக்கலாமே ஜெயமோகன்?
கடைசி கண்றாவியாக, தமிழ் இலக்கணத்துக்கு சற்றும் பொருந்தாமல் அந்தப் பதிவை எப்படி முடிக்கிறீர்கள் பாருங்கள்…
“இத்தகைய தருணங்களில் மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவிலெழுகிறது. அஞ்சலி.”
அது என்ன “தருணங்களில்”? மரணம் என்பது ஒரு முறைதானே நிகழும்? நீங்கள் உதிர்த்த அந்தப் பன்மைக்கு என்னதான் பொருள்? வாந்தி எடுத்து வைத்தார்போல வார்த்தைகள் வந்து விழுந்து விட்டதா? அல்லது ‘நீ என்னென்னென்ன சொன்னாலும் கவிதை’ என யாராவது உங்கள் காதில் அமர்ந்து பாடிக் கொண்டே இருப்பார்களா? என்ன இழவு ஐயா இது?
தயவுசெய்து இனி யாருக்கும் இப்படிச் செய்யாதீர்கள். இது கொடூரமானது. நீங்கள் அங்கலாய்க்கும் இந்து ஞான மரபுக்கு நேர் விரோதமானது.
மீண்டும் கவனியுங்கள். நீங்களும்தான் தலையணை தலையணையாக எழுதி வைக்கிறீர்கள். மேடையில் உங்களை அறிமுகப்படுத்தும்போது…
“அவையோர்களே, இவர் அப்பாவி மாவுக்காரியிடம் சண்டையிட்டு மண்டையடி பட்டதாக சோஷியல் மீடியாக்களில் பிரபலமானவர். மேலும், வைரமுத்துவுக்கு விருது கொடுத்தது தப்பு என்று அமேரிக்கா வரை சென்று அழுதவர். பெயர் ஜெயமோகன்” என்று அழைத்து அறிமுகப்படுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?
வைரமுத்துவுக்கு விருது கொடுத்தது தமிழுக்கே அவமானம் என்கிறீர்களே, இப்படி ஒரு கோணல் குணத்தோடு எழுதும் நீங்கள் இந்து ஞான மரபுக்கே அவமானம் என்றால் அது சாலப் பொருந்தும்தானே?
மானுடத்துக்கான ஆன்ம உயரத்தில் மிக மேலோங்கிய எண்ணற்ற ரிஷிகள் – முனிகள் – ஆன்றோர்கள் – சான்றோர்களால் வளர்த்தெடுக்கப்பட்டதாம் ஆயிரமாயிரங்காலத்து இந்து ஞானமரபை…
நீங்கள் உள்ளார்ந்த சாதகனாக நின்று கொள்ளாமல், ஓர் வியாபாரப் பொருளாக (Commodity) மட்டுமே அணுகுகிறீர்கள் என்பதாகத் தமிழுலகம் கொண்டு விட்டால் இனி வருங்காலத்து உங்களது எஞ்சிய முயற்சிகள் எல்லாம் என்னவாகும்? சிந்திப்பீர்களா?
தயவுசெய்து இனியேனும் உங்களது குணத்தை செம்மைப் படுத்திக் கொள்ளுங்கள். அது எளிதில் மாறாதுதான். திருவண்ணாமலை, கொல்லி மலை என்று எங்கேனும் சென்று ஏதாவது ஒரு குகையைப் பிடித்து தனிமையில் ஒரு பத்தாண்டுகள் அமர்ந்து கொண்டால் வாய்ப்புண்டு. முயற்சி செய்து பாருங்கள்.
கவலைப்படாதீர்கள், ‘ஐயையோ,ஜெயமோகனைக் காணோமே..’ என்று தமிழிலக்கியம் இங்கே தற்கொலை செய்து கொண்டுவிடாது.
அன்றந்த நாளில் நண்பர் அரவிந்தனின் பூத உடலதன் மேல் மாலை சார்த்த குனிந்த அத்தருணத்தில் அவரது முகத்தை சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். என்ன ஒரு தீர்க்கமான முகம்! மரணக் கவலையற்ற அரவிந்தன் முகம்!
‘போகட்டும் அரவிந்தன், ஜெயமோகனை மன்னித்துவிடுங்கள்’ என உங்களுக்காக மனதுக்குள் பரிந்தேன்.
என் நண்பர் அரவிந்தன் இளகிய மனதுடைய படைப்பாளர். நல்லவர். அவரது பேரான்மா உங்களை மன்னிக்கக் கூடும்!
நீங்கள் வழக்கம்போல நவீனம் என்ற பெயரில் புரியாத வறட்டு மொழியில் ஓயாமல் பேசி அமேரிக்காவையும் ஏமாற்றி விட்டு வாருங்கள்.
அதுபோக,
அந்த அமேரிக்க மேடையில் நீங்கள் அணிந்திருக்கும் இந்து ஞான மரபில் நெய்யப்பட்ட கோட்டையும் சூட்டையும் ஏற்பாடு செய்து கொடுத்த பரிதாபத்துக்குரிய அந்த ‘ஏமாந்த லாபிக்கு’ எனது மனமார்ந்த அப வாழ்த்துக்கள்!
கட்டுரையாளர் குறிப்பு
ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். ஸ்ரீராம் சர்மா.
