சவுக்கு சங்கரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றாலும் அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் இன்று(ஆகஸ்ட் 6) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “ஊடகவியலாளர்கள் அல்லது யூடியூபர்களின் குரல்கள் நெரிக்கப்பட்டால் நாம் மீண்டும் காலனித்துவ காலத்திற்கு செல்ல நேரிடும்.
தடுப்பு காவல் என்பது காலனித்துவச் சட்டமாகும். பல அமைப்புகள் தவறான கருத்துக்களை வெளியிடுகின்றன. நீங்கள் தேர்ந்தெடுத்து சிலருக்கு எதிராக செயல்படுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், “இல்லை… தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக யூடியூபர் ஒருவர் தவறான செய்தியை பரப்பினார். அவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று பதிலளித்தார்.
இதையடுத்து, தடுப்புக்காவல் என்பது காலனித்துவ முறை என்று மீண்டும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து, “அவரை(சவுக்கு சங்கர்) தடுப்பு காவலில் வைத்தது குறித்து மட்டுமே நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். நீங்கள் வழக்கமான குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரலாம்” என்றனர்.
இதற்கு காவல்துறை தரப்பில், “அவர் தொடர்ந்து குற்றம் செய்து வருகிறார்” என்று பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் எத்தனை பெண் போலீசார் பணி புரிகின்றனர்” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குக் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், “25 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், “உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். வழக்கை சரியாக பதிவு செய்துள்ளீர்கள். அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். ஆனால் பேச்சு சுதந்திரத்தை நெரிக்கவோ நசுக்கவோ முடியாது.
சவுக்கு சங்கருக்கு எதிரான காவல்துறையினரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சங்கரின் அவமதிப்பு நடவடிக்கைக்காக அவரை தண்டிக்கவும் செய்தார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை நாம் பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், “எதிர்காலத்தில் அவர் இதுபோன்ற செயல்படுவதை தடுக்க வேண்டும். இது போன்ற செயல்களை செய்தால் மீண்டும் காவலில் வைக்கப்படலாம் என்று அச்சம் அவருக்குள் வரவேண்டும்.
தானாக முன்வந்து தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறுமாத சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியது” என்று கூற
“இனி அவமதிப்பு கருத்துக்களை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், “ திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதற்கு காவல்துறை தரப்பில், “சவுக்கு சங்கர் கூறியது போன்ற வார்த்தைகள் காவல்துறையினரின் மன உறுதியை பாதிக்கிறது” என்று வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “நீங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்க வேண்டும். ஆனால் குண்டர் சட்டம் எதற்கு” என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், “மற்றொரு வீடியோவில் அவர் ஒட்டுமொத்த பெண் போலீசாரையும் அவதூறாக பேசியுள்ளார் என்றார்.
இதற்கு நீதிபதிகள், “நாங்கள் உத்தரவு பிறப்பித்தால் ஒரு மாதிரியும், இல்லை என்றால் ஒரு மாதிரியும் பேசுகிறீர்கள். நீதிபதிகள் பற்றியும் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்கள். அதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமா. சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் பேசப்படும் அரசியல் பேச்சுகளும் பொது அமைதியை பாதிக்கிறது என்று சொல்ல முடியுமா? குண்டர் சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைப்பதற்கான காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “ஒரு நேர்காணலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக போலி கடிதத்தை காட்டியிருந்தார்” என்று பதிலளித்தார்
இதையடுத்து நீதிபதிகள், “சமூக ஊடகங்கள் மிகவும் பரவலானது. எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பார்வையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இது, நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.
தற்போது எல்லாம் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் உள்ளது. அவை நடுநிலையாக இல்லை. அந்தந்த தரப்பினருக்கு வசதியான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றை மட்டுமே ஒளிபரப்புகின்றனர். அந்த சேனல்களை பார்ப்பது யார்? அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தானே.
அதுமட்டுமின்றி, தற்போது எலலாம் ஒவ்வொரு சிறிய தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கின்றன. அவரவர் விரும்புவதை பார்க்க முடிவு செய்து பார்க்கின்றனர்.
தவறான எண்ணம் இருந்தால் தவறான விஷயங்களை மட்டுமே பார்ப்பார்கள். இப்போது சொல்லுங்கள் யார் மீது தவறு இருக்கிறது. யூடியூபில் பதிவு செய்பவர்களா அல்லது அத்தகைய வீடியோக்களை பார்க்க விரும்புபவர்களா?
சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்திற்குரியது தான். இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்கு தண்டனை பெற்றுத்தரலாம். ஆனால் குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு” என குறிப்பிட்டனர்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!