வங்க தேசத்தில் நிலைமை மோசமடைந்ததால், இந்தியாவில் தஞ்சமடைய தற்காலிக அனுமதி கேட்டதின் பேரில் ஷேக் ஹசினாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
வங்க தேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் நிலையில் அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனது பதவியை ராஜினாமா செய்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, அங்கிருந்து தப்பி ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 6) வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷேக் ஹசினா இந்தியா வந்தது குறித்து விளக்கமளித்தார்.
அவர் பேசுகையில், “வங்கதேசத்தின் நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். டாக்காவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். அந்நாட்டில் சிறுபான்மையினரின் நிலைமையை கண்காணித்து வருவகிறோம்.
ஷேக் ஹசினா குறுகிய நேரத்தில் இந்தியா வர அனுமதி கோரினார். வங்கதேச விமான அதிகாரியிடம் இருந்து அனுமதி கோரப்பட்டது. அங்கு நிலைமை மோசமடைந்ததால் அவர் வேண்டுகோளுக்கு இணங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அவர் நேற்று மாலை டெல்லி வந்தார்.
ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடைபெற்றது.
நேற்று ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாக தெரிகிறது.
தற்போது தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் மூலம் இந்தியர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.
வங்கதேசத்தில் 19,000 இந்தியர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9,000 பேர் மாணவர்கள். பெரும்பாலான மாணவர்கள் ஜூலையில் இந்தியா திரும்பிவிட்டனர்.
அங்கு சட்டம் ஒழுங்கு சீராகும் வரை கண்காணித்து கொண்டிருப்போம். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக இந்தியா நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
டிஜிட்டல் திண்ணை: பழுப்பது நிச்சயம்… ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!
வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!