நாட்டின் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார்? அவருக்கு என்னதான் நடந்தது? என கேள்விகள் கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி கடிதம் எழுதி உள்ளார்.
ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டதாலேயே ஜெகதீப் தன்கர் பதவி விலகியதாக கூறப்பட்டது. மாநிலங்களவையின் தலைவர் என்ற முறையில் ஜெகதீப் தன்கருக்கு பாரம்பரிய முறைப்படியான பிரிவு உபசார நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.
தற்போது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜெகதீப் தன்கர், எங்கே போனார்? அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலுமே இல்லையே? என மூத்த அரசியல் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பி இருந்தார். இதே கேள்வியை இந்தியா கூட்டணி எம்பிக்களும் எழுப்பி இருந்தனர்.
இந்த பின்னணியில் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனாவின் தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ஜெகதீப் தன்கருக்கு என்னதான் ஆச்சு? என்பதை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் சஞ்சய் ராவத்.
