முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த விசாரணை அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு தரப்பினரும் கூறினர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 2017ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில், இதுவரை எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 157 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை முடிவடைந்த நிலையில் இறுதி அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி இந்தக்குழு ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணை முடிவுகளை தீவிரமாக பரிசீலித்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளது.
அறிக்கையில் கூறியிருப்பதாவது :
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக 5 முதல் 7 நாட்கள் அவருக்கு காய்ச்சல் மற்றும் குடல் இயக்க பாதிப்பு இருந்துள்ளது. குடும்ப டாக்டரான சிவக்குமார் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்துள்ளார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவருக்கு சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், தலைசுற்றல், தைராய்டு, மரபுவழி தோல் அழற்சி, குடல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நரம்பு தளர்ச்சி போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்துள்ளது.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக திராட்சை பழம், கேக், இனிப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்ததாகவும் ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
செப்டம்பர் 22-ந்தேதி இரவு 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவருக்கு மூளையின் செயல்திறன் குறைந்து ஆக்சிஜன் அளவு 48 சதவீதமும், நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 88 என்ற அளவிலும், ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவிலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகவும் இருந்துள்ளது.
முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே அப்பல்லோ ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. இதய துடிப்பை கட்டுப்படுத்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது.

75 நாட்கள் சிகிச்சை பலனின்றி மரணம்!
ஜெயலலிதாவின் உடல்நிலை இடையிடையே சில நாட்கள் மோசமாக இருந்துள்ளது. பாக்டீரியா பாதிப்பால் சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்டதும் மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நுரையீரல் பாதிப்பு ஜெயலலிதாவின் உடல்நிலையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சி.பி.ஆர். எனப்படும் இருதய பகுதியில் அழுத்தம் கொடுக்கும் சிகிச்சையை தொடர்ந்து எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் எக்மோ சிகிச்சைக்கு ஜெயலலிதா உட்படுத்தப்பட்டார். இருந்தபோதிலும் டிசம்பர் 5-ந்தேதி இரவு 11.30 மணிக்கு அவரது மூளை மற்றும் இதயம் செயலிழந்து உயிர் பிரிந்தது.

இதய செயலிழப்பு தான் மரணத்துக்கு காரணம்!
ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.
இதய செயலிழப்பு முடிவில், ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இதய செயலிழப்பு தான் அவரது மரணத்துக்கு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது.
அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை – எந்த தவறும் இல்லை!
ஒவ்வொரு நிலையிலும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் தேவையோ அத்தனை மருத்துவ பரிசோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்பது மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் மூலம் தெரிகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மற்றும் ஆணையத்தின் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் வரும் 23ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தாக்கல் செய்ய உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெயலலிதாவே கை வைக்காத விதிகளில், எடப்பாடி கை வைத்தது ஏன்? சசிகலா
