விஜய்யின் உருவ பொம்மையை வைத்து தவெகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதன்முறையாக களம் காண உள்ளது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக விஜய்யின் பிரச்சாரத்தை தடுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் விஜய்யின் பரப்புரை நடைபெற இருந்தபோது ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், அந்தப் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்தார். இதனால் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தவெகவினர் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக சார்பில் நவல்பட்டு விஜி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், விஜய்யின் உருவப் பொம்மையுடன் சிறப்பு வாகனத்தில் ஏறி, 500க்கும் மேற்பட்ட கட்சியினருடன் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்துக்கு சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் முடிந்ததும், விஜய்யின் உருவப் பொம்மையுடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதை விமர்சித்து வருகின்றனர்.
