இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்!

Published On:

| By indhu

Vikravandi by-election: PMK candidate filed nomination!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி இன்று (ஜூன் 19) வேட்புமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, இதுவரை 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று (ஜூன் 19) காலை திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தற்போது பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் இன்று (ஜூன் 19) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக சட்டமன்றக்குழு தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

Vikravandi by-election: PMK candidate filed nomination!

அப்போது பேசிய அவர், “ஆளும் கட்சியின் 10 அமைச்சர்கள் இங்கேயே தங்கி அவர்களது அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

கடந்த காலத்தில் நீங்கள் “பென்னாகரம் பார்முலா”வை பார்த்திருப்பீர்கள், இப்போது “விக்கிரவாண்டி பார்முலா”வை பார்க்க உள்ளீர்கள்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆளும் திமுக என்ன செய்துள்ளது. அருகில் உள்ள கள்ளக்குறிச்சியில் இன்று கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எள்ளளவும் தகுதி இல்லை. கலைஞரின் திமுக வேறு. ஸ்டாலினின் திமுக வேறு.

சமூக நீதிக்கும் ஸ்டாலினின் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் அதிக முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பிகார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ்வளவு மாநிலங்களில் முடிவது, தமிழகத்தில் முடியாதா? இவர்களுக்கு இவற்றை செய்ய மனம் இல்லை.

கூட்டணியை பொறுத்து நிலைப்பாட்டை மாற்றுவதற்கு நாங்கள் திமுக இல்லை. திமுக தான் கூட்டணிக்கு ஏற்றவாறு நிலைப்பாட்டை மாற்றும். நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். “நீட் தேர்வு வேண்டாம்” என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

தமிழ்நாடு குடிகார நாடாக மாறிவிட்டது. தற்போது கஞ்சா நாடாகவும் மாறிவிட்டது” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீதிபதி சந்துரு பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் – கொந்தளித்த எச்.ராஜா

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழப்பா? ஆட்சியர் சொல்வதென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share