கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இன்று (ஜூன் 19) செய்திகள் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கண்ணுக்குட்டி என்ற நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இவரிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து வந்துள்ளனர்.
நேற்று (ஜூன் 18) இரவு கண்ணுக்குட்டியிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்தநிலையில், கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், ஜெகதீஷ், மகேஷ் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் கூறும்போது, “கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. சமய் சிங் மீனா, “இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. முழு விசாரணை முடிந்து, உடற்கூராய்வு அறிக்கை வெளிவரும் வரை இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு அரசுக்கு எனது கடும் கண்டனம்.
“கள்ளச்சாராயம் இல்லை மெத்தனால்” என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஐந்து பேர் உயிரிழந்தற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை
நீட் தேர்வு முறைகேடு… ஜூன் 21ல் காங்கிரஸ்… ஜூன் 24ல் திமுக போராட்டம்!