பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று (ஜூன் 19) தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் தொடர்பாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் 2023 ஆகஸ்ட் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
அதில், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துகள் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று (ஜூன் 18) சமர்பித்தார்.
அதில் அறிக்கையில், “பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமுத்துவம், சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத அளவுக்கு தலைப்புகளைச் சேர்க்க வேண்டும். இது தொடர்பான பொருத்தமான மாற்றங்களைப் பரிந்துரைக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்புக் குழுவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நியமிக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்.
சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி அதிகமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும். கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜூன் 19) அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, “முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேற்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிக்கையை சமர்பித்துள்ளார்.
அந்த அறிக்கை சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக காழ்ப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பரிந்துரைகள் உள்ளன.
இந்த அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். ஏனெனில், முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று பேசுபவர்கள், இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து வரக்கூடாது, கோவில் கயிறுகளை கைகளில் கட்டக்கூடாது என்பதெல்லாம் சரியான பரிந்துரை இல்லை.
குறிப்பிட்ட சாதி அதிகமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக இருக்கக்கூடாது என்பதெல்லாம் எந்தமாதிரியான செயல்முறை.
பெரும்பான்மை சமூகத்தினரை குறிவைக்கும் வகையில் நீதிபதி சந்துருவின் அறிக்கை உள்ளது. எனவே, தமிழக அரசு இதை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
நான் கையில் சிவப்பு நிற கயிறு கட்டி உள்ளேன். இது எந்த சாதியை குறிக்கிறது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உள்நோக்கத்துடன் தான் நீதிபதி சந்துருவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதை நிராகரிக்க வேண்டும் என்பது பாஜக மையக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும்” என எச்.ராஜா பேசியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல் காந்தி பிறந்தநாள்: வாழ்த்து சொன்ன அரசியல் தலைவர்கள்!
”மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை