கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 12) பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது தவெக ஆட்சி அமைத்தால் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்களை விளக்கி கூட்டத்தில் பேசிய விஜய், “லஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு நலத்திட்டங்கள் நேரடியாகச் சென்று சேரும். அதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதார் கார்டு போன்று தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றிய அனைத்து தரவுகளும் இந்த கார்டில் இருக்கும். பிறப்பிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் அவருக்கு உரிய திட்டப் பலன்கள் தானாகவே சென்று சேரும்.
விண்ணப்பிக்கத் தேவையில்லை, லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவை இல்லை.
வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும். செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும். இது ஸ்டாலின் சார் விடும் கதை மாதிரி அல்ல. அறிவியல் பூர்வமாக சாத்தியமான ஒன்றைத்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதை நமது தவெக ஆட்சி உருவாக்கி காட்டும்” என்று விஜய் கூறினார்.
மேலும், “நமது அரசு அமைந்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் நிறைவேற்றப்படும். வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். அதில் டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், புகார் தாக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் உங்கள் மொபைலில் இருக்கும். இதில் எந்த சேவையும் தாமதமானால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நமது அரசில் பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், அரசின் பங்காளர்களாக இருப்பார்கள். My Victory Tamil Nadu .in என்ற இணையதளம் உருவாக்கப்படும். மாநில வளர்ச்சிக்கான யோசனைகளை பொதுமக்கள் முன்வைக்கலாம், கொள்கை முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கலாம், அரசு சேவைகளை மதிப்பிடலாம், நிதி நிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கலாம்.
மக்கள் அரங்கம் திட்டத்தின் மூலம் தமிழக வரலாற்றில் முதன்முறையாக குடிமக்கள் டிஜிட்டல் முறையில் நேரடியாக சட்டமன்றத்தில் மனுக்களை சமர்ப்பிக்க முடியும்.
10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும். 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும். சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும், மக்கள் மனுக்களுக்காக ஒதுக்கப்படும். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தலைநகரமாக தமிழ்நாடு மாற்றப்படும். இந்தியாவில் முதல் அரசாக தவெக அரசு செயற்கை நுண்ணறிவு அமைச்சகத்தை உருவாக்கும்.
“தமிழ்நாட்டுக்கு வருவாய் நன்றாக வருகிறது. ஆனால் அதைவிட அதிகமாக செலவு செய்யப்படுகிறது. மாநிலத்தின் கடன் 10.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் வாங்கியதை விட இந்த ஐந்து ஆண்டுகளில் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது. இப்படி தொடர முடியாது. வட்டிக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நம் பிள்ளைகளின் கல்வி, குடும்ப மருத்துவம், கிராம சாலைகளில் இருந்து திருடப்பட்ட ரூபாய்க்கு சமம்” என்றார்.“தமிழ்நாட்டை ஆண்ட ஒவ்வொரு கட்சியும் ‘எங்களால் இதை சமாளிக்க முடியவில்லை’ என்றுதான் சொல்லியிருக்கிறது. ஆனால் தவெகவின் பதில் வேறுபட்டது. மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்று நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்களிடமிருந்து ஒரு ரூபாய் கூடுதல் வரி வசூலிக்காமல், அதிக வருவாய் ஈட்டி, முறையாகவும் குறைவாகவும் செலவு செய்து, புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு” என்றார்.
