தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 12) கன்னியாகுமரியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய விஜய் மீனவர்களுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் திட்டங்களை பட்டியலிட்டார். அதில்,
மீனவர் பாதுகாப்பு உரிமைத்தொகை
ஆண்டு மீன் பிடி தடை காலத்துக்கான ‘மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8,000லிருந்து ரூ.20,000ஆக உயர்த்தப்படும்.
படகு பாதுகாப்பு நிதி
படகுகளை விடுவிப்பது குறித்து தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், மீனவர்களின் குழுவுக்கு ஆதரவும் அளிக்கவும், படகு உரிமையாளருக்கு உடனடி இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
கடல் தாய் வீட்டு வசதி திட்டம்
கடலோர பகுதிகளில் உள்ள குடிசைகள் மற்றும் சிதிலமடைந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு, புயல் தாங்கக்கூடிய மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வீடுகளை கட்ட ஒரு தனி வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்படும்.
மீனவர் எரிபொருள் பாதுகாப்பு திட்டம்
இயந்திரப் படகுகளுக்கான மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீடு 1,800 லிட்டரிலிருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு ரூ.15 மானியம் படகு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இவை தேர்தலுக்காக திமுக தருவது போல வாயில் வடை சுடுவது போன்றவை அல்ல என்றும், “உங்களை உண்மையாக நேசிப்பதன் வெளிப்பாடு” என்றும் விஜய் தெரிவித்தார்.
