தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில் பேசாமல் சென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 10) காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததால், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து பிரச்சார வேனில் பயணித்தபடி ரோடு ஷோவாக காரைக்குடி நோக்கி சென்றார்.
மதுரையிலிருந்து காரைக்குடிக்கு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்றாலும், வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையது. விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் பிற்பகல் 12.30 மணியிலிருந்து 2.30 மணி வரை ஆகும். இந்நிலையில் விஜய் பிரச்சார இடத்திற்கு தாமதமாக வந்ததால், அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
ஆனால் விஜய் வந்த போது அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதால், விஜய் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கு பேசாமலேயே புறப்பட்டுச் சென்றார்.வேட்பாளர்களை வேனில் ஏற்றிக் கொண்டு, கையில் சின்னத்தை ஏந்தியபடி வாக்கு மட்டும் சேகரித்தபடி சென்றார். இதனால் 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த தொண்டர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் பேசாமலேயே அங்கிருந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விஜய் பிரச்சார வாகனத்தில் ஏற முயன்றுபிரசார வாகனத்தில் தொற்றிய தொண்டர்களின் விரல்களை, விஜய்யின் பாதுகாவலர் ஒருவர் பூட்ஸ் காலால் நசுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
