மக்களவை எம்.பி.யாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திடீரென தமிழக சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் மக்களவை எம்.பி.யாக உள்ள திருமாவளவன், தாம் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் திருமாவளவன். அவரது பதவிக் காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் உள்ளன.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவது குறித்து கேட்ட போது, “காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட விசிகவில் 200-க்கும் மேற்பட்டோர் கேட்டு வருவதால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்கவே தானே காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக கூறுகிறார் திருமாவளவன்” என்கின்றனர்.
அத்துடன், “மாநில அரசியலில் தாம் கவனம் செலுத்த இருப்பதால் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்கிறார் திருமாவளவன்.
திருமாவளவனின் அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
திருமாவின் மக்களவை எம்.பி. பதவி காலம் 2029-ல் தான் முடிவடைகிறது. திருமாவளவன் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்.
அப்படி திருமாவளவன் ராஜினாமா செய்தால் சிதம்பரம் மக்களவை தொகுதி இடைத் தேர்தலை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும்.
2024 தேர்தலில் திமுக கூட்டணியில்தான், விசிகவுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. திருமா ராஜினாமா செய்து இடைத்தேர்தல் நடந்தால் அப்போது திமுக என்ன முடிவு எடுக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், தமிழக தேர்தல் களத்தில் எப்போதும் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது திமுகவின் தேர்தல் அறிக்கைதான்.. கலைஞர் காலத்தில் இருந்து தற்போது ஸ்டாலின் காலம் வரை இதுதான் கள நிலவரம்.
திமுக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு ரூ8,000 கூப்பன், மகளிர் உரிமைத் தொகை ரூ2,000 ஆக உயர்வு உள்ளிட்ட பல்வேறு அதிரடி வாக்குறுதிகள் இடம் பெற்று பேசு பொருளாகி இருக்கின்றன. ஆனால் திருமாவளவனின் இந்த திடீர் அறிவிப்பு, திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சென்றடைவதை திசை திருப்பக் கூடியதாக இருக்கிறது என்கிற வருத்தத்தையும் திமுக கூட்டணி அனுதாபிகள் வெளிப்படுத்துகின்றனர்.
மேலும், ஒரு உட்கட்சி பிரச்சனைக்காக இப்படி ஒரு முடிவை திருமாவளவன் எடுக்கலாமா? என்பதும் அவர்களது ஆதங்கம்.
திருமாவளவனின் இந்த திடீர் முடிவு இப்போது தேர்தல் களத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
