பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்த வானதி சீனிவாசன் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். நேற்று பிற்பலில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வானதி சீனிவாசன் நேற்று மதியம் 2:50 மணிக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக KMCH ல்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு,2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றால் லேசான அலர்ஜி ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவு 8:00 மணிக்கு அவர் கண்காணிப்பிற்காக ஐசியு பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
தற்போது வானதி சீனிவாசன் சுயநினைவுடன், பேசக்கூடிய நிலையில் மிகவும் நலமாக உள்ளார். முழுமையாக குணமடைய குறைந்தது மேலும் 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை தேவைப்படும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வானதி சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
