மோடிக்கு எதிராகச் செயல்படுவதால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – வானதி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vanathi

தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல வேண்டுமென்றால், ஒரு குடும்ப ஆட்சிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன்,“தமிழகத்தில் உண்மையான வளர்ச்சி வேண்டுமென்றால், பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழகத்தை ஆள வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் ஒரு வீடுகூட கட்டப்படவில்லை. விஸ்வகர்மா சமுதாய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை இந்த அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான விஸ்வகர்மா சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தனது அரசியல் நலனுக்காக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகச் செயல்படுவதால், தமிழகத்தின் வளர்ச்சியும், கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திமுகவின் ஐந்து ஆண்டு ஆட்சியில் ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமே நடந்துள்ளது. தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையே தடுத்து நிறுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இருந்த கோவை, இன்று பெண்கள் வெளியில் சென்றால் வீட்டுக்கு உயிருடன் திரும்புவார்களா என்ற பயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு திமுக அரசு மாற்றியிருக்கிறது. ரூ.5000 கொடுத்தால் பெண்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். லட்சம் லட்சமாக கொட்டினாலும், இந்த முறை திமுகவை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம்.

ADVERTISEMENT

தமிழகத்தில் போதை இல்லாத இடமே இல்லை. திமுக ஆட்சி தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலத்தை மறந்துவிட வேண்டியதுதான். இப்படிப்பட்ட ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளிலும் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

நான் சட்டமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு பலன் தரும் திட்டங்களை உருவாக்கியுள்ளேன்” என்றார்.

மேலும் அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். கரூரில் இருந்து 10 தலை ராவணன் மாதிரி ஒரு இறக்குமதியை அனுப்பியிருக்கிறார்கள். கரூரில் அதிகமாக மணல் கடத்துபவர்கள் செந்தில் பாலாஜியின் ஆட்கள். அங்கு கொள்ளையை முடித்துவிட்டு, இப்போது நொய்யல் பக்கம் வந்திருக்கிறார்கள்.

கோவை பகுதி மக்கள் மிகவும் அமைதியானவர்கள், பண்பானவர்கள். இந்தப் பண்பாட்டைக் கெடுப்பதற்காகவே ஸ்டாலின் இதைச் செய்திருக்கிறார். அவரே நம்பர் ஒன் ஊழல்வாதி, கிரிமினல் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் பாலாஜியைப் பற்றி முதல்வரே சொன்னார். இப்போது அதே செந்தில் பாலாஜி தியாகியாகிவிட்டார்.

கரூர் முன்னாள் அமைச்சரை கொங்கு மண்டலம் திரும்பிப் பார்க்காமல் கரூருக்கு ஓட வைக்கும் அளவுக்கு நமது வெற்றி இருக்க வேண்டும். கொங்கு மண்டலம் அதிமுக-பாஜக கூட்டணி வாயிலாக வலுப்பெற்ற இடம். எத்தனையோ முக்கிய திட்டங்களை பாஜகவால் கொண்டு வர முடியும்.

ராணுவ தளவாட உற்பத்தி மையம், சிறு குறு தொழில் கடன் உதவித் திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இங்கு கொண்டு வரலாம். தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல வேண்டுமென்றால், ஒரு குடும்ப ஆட்சிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share