தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி இன்று (ஜூலை 21) விஜய் மீது புகார் மனு அளித்துள்ளார். vaishnavi filed complaint on tvk vijay
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் நடிகர் விஜய் தொடங்கிய தவெகவில் இணைந்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பணியாற்றி வந்தார்.
நடிகர் விஜய் மற்றும் தவெகவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பேட்டி அளித்து வந்த நிலையில் அவர் பிரபலமடையத் தொடங்கினார்.
இந்த நிலையில் தவெகவில், தான் உள்ளிட்ட எந்த பெண்ணிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி அங்கிருந்து விலகினார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி கடந்த மே மாதம் திமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும், தவெக தொண்டர்கள் மீதும் வைஷ்ணவி புகார் மனு ஒன்றை அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”தவெக-வில் இருந்து வெளியேறியது முதல் என்னை பற்றி தவெகவினர் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாங்கள் கருத்தியல் ரீதியாக கேள்விகளை தவெகவினரிடம் முன் வைத்தால் கூட அவதூறு கருத்துக்களைத் தான் கூறுகின்றனர். இது குறித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிடவில்லை. எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
