பாஜகவுடன் இம்மியளவும் மதிமுக உறவு வைக்காது; திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப் போவதாக ஊடகங்கள் அபாண்டமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி முதல்வர் ஸ்டாலினை வைகோ, துரை வைகோ எம்பி உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு, மிகப் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களைப் பெற்று- Absolute majority of its own திமுகவுக்கு மட்டுமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்கக் கூடிய விதத்தில்தான் வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்ற என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன். ஆகையால் கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

கூட்டணி அரசு அமையாது
ஆகையால்தான் நான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.. தனி அரசு- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனி அரசுதான் அமையும்- கூட்டணி அரசு அல்ல- அவர்கள் முழுப் பெரும்பான்மையை பெறுவார்கள் என்பதை கடந்த சில நாட்களாகவே கூறி வருகிறேன்.
பாஜகவை தடுக்க வேண்டும்
எங்களைப் பொறுத்தவரையில், பாஜகவும் ஆர். எஸ்.எஸ்.-ம் இந்துத்துவா சக்திகளும் இந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் பூமியில் கால் வைக்க கோடானுகோடி பணத்தையும் செலவழிக்கின்றனர். அதிமுகவுடனும் உடன்பாடு வைத்துக் கொண்டனர். இப்படி தமிழ்நாட்டில் நுழைய முற்படுகின்றனர். இதைத் தடுக்க வேண்டியது திராவிடர் இயக்கத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொருவரின் கடமை என்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகாலமாகவே நான் சொல்லி வருகிறேன்.
மதிமுக நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
அந்த அடிப்படையில்தான் கடந்த தேர்தலில் திமுகவுடன் மதிமுக உடன்பாடு வைத்தது; தமிழகத்தில் பாஜகவையும் இந்துத்துவா சக்திகளையும் நுழையவிடமாட்டோம் என்பதற்காகவே திமுகவுடன் உடன்பாடு வைத்துக் கொண்டோம். அதே நிலைப்பாடுதான் இன்றும் தொடருகிறது; நாளையும் தொடரும்.
பாஜக- அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையா?
ஆனால் ஒன்றிரண்டு ஏடுகளில், இன்று காலையில் கூட அபவாதங்களை- அப்பட்டமான பொய்களை- மனம் கூசாமல்- மனச்சாட்சி இல்லாமல் நேற்று முதல்வர் ஸ்டாலினை தேமுதிகவினர் பார்த்த உடன், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும்; மதிமுக- பாஜக, அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஏதோ அவர்கள் பக்கத்தில் இருந்து லைட் பிடித்தது போல, பக்கத்தில் இருந்து கேட்டதைப் போல எழுதி இருக்கின்றனர். ஏன் இப்படி அபாண்டமான செய்திகளை, ஒரு அரசியல் இயக்கத்தை குறிவைத்து தாக்குவதை உங்கள் மூல நோக்கமாக வைத்துள்ளீர்களே ஏன்? என்ன கேடு செய்தோம் உங்களுக்கு?
பாஜக மீது கடும் விமர்சனம்
நான் தொடர்ந்து எல்லா கூட்டங்களிலும் பாஜகவையும் இந்துத்துவா சக்திகளையும் மிகக் கடுமையாக தமிழ்நாட்டில் எவரும் விமர்சிக்காத அளவுக்கு விமர்சித்து வருகிறேன். அதற்கான காரணங்களை சொல்லி வருகிறேன். ஆகவே அந்த நிலைப்பாட்டில் என்றைக்கும் மாறுதல் வராது.

எந்த சூழ்நிலையிலும் இம்மியளவும் பாஜகவுடன் உறவு இல்லை
எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்தைக் கொண்டும் இந்துத்துவா சக்திகளோடும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இயங்குகின்ற பாஜகவுடனும் மதிமுக இம்மியளவும் உடன்பாடோ உறவோ வைத்துக் கொள்ளாது என முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்குச் செல்லும் இந்த வழியில் பத்திரிகையாளர்களிடம் உறுதியாக பதிவு செய்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.
