மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் அமீர்.
யோகி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான அமீர், அதன் பின்னர் மற்ற ஹீரோ படங்களில் அவ்வப்போது கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அமீருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
மே 10 ஆம் தேதி இயக்குநர் ஆதம் பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள “உயிர் தமிழுக்கு” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய அமீர் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படம் குறித்த ஒரு அப்டேட்டை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: “வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும். படம் திட்டமிட்ட படியே நடக்கும் எனவும், வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 வேலைகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் , முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கின்றார். இந்த படத்திற்காக வீட்டிலேயே ஒரு காளை மாட்டை நடிகர் சூர்யா வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் வாடிவாசல் படம் குறித்து பேசிய போது இந்த படம் வெளியான பிறகு சூர்யா ஒரு லெஜண்டாக மாறிவிடுவார் என்றும், வெற்றிமாறனின் மிகச்சிறந்த படைப்பாக வாடிவாசல் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
கூடிய விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
CSK-வுக்கு எதிரான ஆட்டம்… கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதம்… காரணம் என்ன?