நீட் தேர்வின் மூலம் போலி மருத்துவர்கள் தான் உருவாகிறார்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 7) தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “உயிர் தமிழுக்கு”. இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று சீமான் மற்றும் இயக்குநர் அமீர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சீமான், “நடந்து முடிந்த நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்ததாக தெரிகிறது. இதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். நீட் தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது.
தமிழகத்தில் எத்தனை போலி மருத்துவர்கள் பிடிபட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதேபோல் வட இந்தியாவில் தற்போது 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதிலிருந்தே நீட் தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குகிறதா? அல்லது தரமான மருத்துவர்களை உருவாக்குகிறதா? என்பது தெளிவாகிறது.
இந்திய நாட்டில் தரமான மருத்துவ மாணவர்களை உருவாக்க அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு என்ன அவசியம் இருக்கிறது? ஒரு தேர்வைக்கூட உங்கள் மாணவர்களுக்காக மத்திய அரசால் நடத்த முடியாதா?
வட இந்தியாவில் நீட் தேர்வு எழுத செல்லும் எந்த மாணவிகளுக்காவது தோடு, மூக்குத்தியை கழற்றி நாம் பார்த்திருக்கிறோமா?
ஆனால் தமிழகத்தில், தோடு, மூக்குத்தி, துப்பட்டா, உள்ளாடை, தாலி சங்கிலி வரை கழற்ற சொல்கிறார்கள்.
மூக்குத்திக்குள் பிட் எடுத்து செல்லப்படும் என்று சொல்கிற நீங்கள் தான், இவிஎம் இயந்திரத்தினுள் எதுவும் செய்ய முடியாது என சொல்கிறீர்கள்.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களை நீங்கள் எந்த மனநிலையில் தேர்வு எழுத அனுமதிக்கிறீர்கள்? அவர்களுக்குள் ஒரு அச்சத்தை நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1199 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனும், 800 மதிப்பெண் பெற்று எல்லையில் தேர்ச்சி பெற்ற மாணவனும் நீட் தேர்வு எழுதிகிறார்கள்.
அவர்களில் 800 மதிப்பெண் பெற்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார், அதனால் அவர் மருத்துவர் ஆகலாம். 1199 மதிப்பெண் பெற்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால் அவர் மருத்துவர் ஆகமுடியாது.
அப்படியென்றால் எதற்காக பொதுத்தேர்வு வைக்கிறீர்கள்? மொத்தமாக மாணவர்கள் அனைவருக்கும் நீட் தேர்விற்கே பயிற்சி கொடுக்கலாமே?
மேலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்தால் அங்கு பாடம் எடுக்கும் பேராசிரியர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவரா? இல்லை. அவர் பழைய பேராசிரியர். பாடத்திட்டத்திலும் மாற்றமில்லை. அப்படி இருக்கும்போது எப்படி தரமான மருத்துவர்கள் உருவாக முடியும்.” என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் அமீர், “ எனது மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு எழுத சென்றார். அவரிடம் புர்காவை கழற்ற சொல்லி இருக்கிறார்கள். அவர் நீட் தேர்வும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று வந்துவிட்டார்.
தோடு, செயின் இவற்றில் எல்லாம் மறைத்து வைத்து பிட் எடுத்துச் செல்லப்படும் என சொல்வது தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கிறது. மேலும் இது ஒரு அச்சமூட்டும் செயல்தான்.
முதலில் நீட் தேர்வினை தனியார் நிறுவனம் ஏன் நடத்துகிறது? இதனை யாராவது கேட்டுள்ளார்களா?” என அமீர் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வு எழுத வருபவர்கள், தோடு, மூக்குத்தி போன்ற உலோகப் பொருட்களை அணிந்து வரக்கூடாது என்பது தேசிய தேர்வு முகமையின் விதிமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“திமுக ஆட்சி இதற்குதான் சாட்சி” : குற்றச்சாட்டுகளை அடுக்கிய டிடிவி தினகரன்
3ஆம் கட்ட தேர்தல்: 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவு!