நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டுமென அரசமைப்புச் சட்டமே தெரிவித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு மதங்களும் அவர்களுக்கென மத சட்டங்களை பின்பற்றுகின்றன. ஆனால் அனைவரும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை என அனைத்தும் ஒரே சட்டமாக இருக்கும். இதற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்து வருகிறது.
இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு 21வது சட்ட ஆணையம் ஆய்வறிக்கை தாக்கல் செய்த நிலையில் 4 வருடங்களுக்குப் பிறகு 22வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 22வது ஆணையம் பொது சிவில் சட்டத்தின் மீதான கருத்துகளைக் கேட்கும் பணியை ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கியது. கருத்து தெரிவிக்க விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 27) மத்திய பிரதேசத்தில் பாஜகவினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது வாக்கு வங்கிக்காக பொது சிவில் சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “நாட்டில் சிலர் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அது பேராபத்தை விளைவிக்கும். அனைத்துத் தரப்பினரும் பலனடையும் வகையிலான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டுமென அரசமைப்புச் சட்டமே தெரிவித்துள்ளது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக சிலர் பொது சிவில் சட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
நாட்டில் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு எந்தக் கட்சிகள் ஆதாயம் தேடிக் கொள்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் ஓா் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றோா் உறுப்பினருக்கு வேறு சட்டமும் இருந்தால், அந்தக் குடும்பம் முறையாகச் செயல்படுமா? அதேபோல், நாடு எப்படி 2 சட்டங்களைக் கொண்டு செயல்பட முடியும்? அதற்கு பொது சிவில் சட்டம் அவசியம்.
முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களான பஸ்மந்தா பிரிவினர், வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே சமநிலையில் வைத்து மதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியல், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என பாஜக தீர்மானித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பிகார், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசின் வளர்ச்சி திட்டங்கள், சில ஜாதிப் பிரிவினருக்கு இன்னும் சென்றடையவில்லை. குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலே அதற்குக் காரணம்.
முத்தலாக் நடைமுறையை ஆதரிப்பவர்கள், முஸ்லிம் தாய்மார்களுக்கு அநீதியை ஏற்படுத்துகின்றனர். எகிப்தில் முத்தலாக் நடைமுறை 80-90 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டது. பாகிஸ்தான், கத்தார், இந்தோனேசியா உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் கூட அந்நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
பக்ரீத்: கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
கொள்முதல் விலைக்கே தக்காளி: தமிழக அரசு திட்டம்!

Comments are closed.