அரியரை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் கிடையாது: யுஜிசி திட்டவட்டம்!

Published On:

| By Balaji

அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யுஜிசி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணையிலிருந்து வருகிறது.

இவ்வழக்கில், அரசின் அறிவிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி தெரிவித்தது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று தெரிவித்தது.

ADVERTISEMENT

இவ்வழக்கில் இன்று அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இறுதி பருவத்தேர்வு நடத்தாவிட்டால், தேர்வை நடத்தக் கால அவகாசத்தை மாநில அரசுகள் நீட்டிக்கக் கோரலாம். இறுதி பருவத் தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

**பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share