‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேச விரோத கருத்து என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஜனவரி 22-ந் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது: உதயநிதியின் தேச விரோத கருத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். உதயநிதியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் உதயநிதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். மக்களை பிளவுபடுத்தும் பேச்சுக்காக உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
உதயநிதி விவகாரம் என்ன?
2023-ம் ஆண்டு சென்னையில் தமுஎகச நடத்திய மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றார். உதயநிதியின் இந்த பேச்சு, ‘சனாதனத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய தூண்டுகிறது’ என பாஜகவின் அமித் மாளவியா சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அமித் மாளவியான் இந்த பதிவு, வெறுப்பு பேச்சு என போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அமித்மாளவியா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, அமித்மாளவியா மீதான வழக்கை ரத்து செய்தார்; மேலும் உதயநிதின் பேச்சு, ‘இனப்படுகொலையை’த்தான் குறிக்கிறது; உதயநிதிதான் வெறுப்பு பேச்சை பேசியிருக்கிறார் என கூறியிருந்தார்.
