தம்மைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என பிரதமர் மோடி மதுரையில் பேசியதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் தந்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்தார். வர்றதுக்கு முன்னாடி பெரியாருடைய படத்தை அங்கிருந்து எடுக்கச் சொன்னாங்க. அதையும் கேட்டு அடிமைக் கூட்டம் அங்கிருந்து எடுத்துட்டு பாஜக-வுடைய சின்னத்தை அந்த இடத்துல வச்சிருக்காங்க.
அதனால்தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு. முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்பீங்க, முரட்டுப் பக்தர்களைப் பார்த்திருப்பீங்க, இன்னைக்கு இந்தியாவே ஒரு முரட்டு அடிமையை தமிழ்நாட்டுல திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய உருவத்துல இன்னைக்கு தமிழ்நாடு பார்த்துகிட்டு இருக்கு.
இன்னும் சொல்லப்போனா அதிமுக-வுடைய பேரையே மாத்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை மாத்தி அண்ணாவோட பேர எடுத்துட்டு அமித்ஷாவோட பேர வைக்கச் சொன்னாலும் எடப்பாடி பழனிச்சாமி உடனே செஞ்சிருவார்.
மதுரையில பேசும்போது ஒன்றிய பிரதமர் மோடி சொல்றார், நான் சில நாட்களுக்கு முன்பு இளைஞரணியினுடைய மாநாட்டுல பேசும்போது சொன்னேன். எங்களையெல்லாம் அதிமுக மாதிரி நினைச்சிட்டு மிரட்டப் பாக்குறீங்க CBI, ED, IT-ன்னு வச்சு மிரட்டப் பாக்குறீங்க. நீங்க ED இல்ல மோடியைப் பாத்தும் திமுக கூட்டம் பயப்படாது அப்படின்னு பேசியிருந்தேன்.
நேற்று அதைக் குறிப்பிட்டு ஒன்றிய பிரதமர் மோடி பேசுறார். ‘என்னைப் பார்த்து யாரும் பயப்பட வேணாம், பயப்படத்தக்க ஆள் நான் கிடையாது’ அப்படின்னு..
நான் சொல்வதெல்லாம் எங்களுக்கு இந்த பதிலச் சொல்லத் தேவையில்லை ஒன்றிய பிரதமர் அவர்களே! உங்களுடைய கூட்டத்துல உங்களுக்குப் பின்னாடி உங்க கூட உட்கார்ந்துருக்கார் அந்த கூட்டத்துக்கிட்ட நீங்க சொல்லுங்க. ‘பயப்பட வேணாம்’னு சொல்லுங்க.
எடப்பாடி பழனிச்சாமியுடைய சம்மந்தி மேல கேஸ் இருக்கு, அதைப் பார்த்து பயப்பட வேணாம்னு சொல்லுங்க. உங்களுடைய கூட்டணியில பல பேரை மிரட்டி வச்சிருக்கீங்களே, அவங்களப் பார்த்து சொல்லுங்க ‘பயப்பட வேணாம்’னு. தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்குறதுக்கு எங்களுடைய தலைவர் இருக்கிறார், திமுக-வுடைய தொண்டர்கள் இருக்கிறோம், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
